×

ஒரே நாளில் 14 அடி உயர்ந்தது பில்லூர் அணையிலிருந்து பவானி ஆற்றில் நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டுப்பாளையம்: பில்லூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 14 அடி உயர்ந்து 97 அடியை எட்டியதால் அணையிலிருந்து 22 ஆயிரம் கன அடி உபரிநீர் பவானி ஆற்றில் திறக்கப்படுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சாந்தாமணி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு வரை 83 அடியாக இருந்த பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 14 அடி உயர்ந்து 97 அடியை எட்டியது. அணையின் மொத்த உயரம் 100 அடி ஆகும். இதையடுத்து பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி உபரிநீர் நேற்று காலை திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

 இதையடுத்து, மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியில் உள்ள கரையோர பகுதி மக்களுக்கு மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார்.அப்போது, கரையோரப் பகுதியில் உள்ள மக்கள் பவானி ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்த அவர் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க காவல் துறை, வருவாய் துறை, தீயணைப்புத் துறை இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் நிலைமையை கண்காணிக்க அந்தந்த பகுதியில் உள்ள வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும்  கனமழை காரணமாக அட்டப்பாடியில் மின்சார தேவைக்காக கேரள மாநிலம் பாலக்காடு  மாவட்டம் மன்னார்காட்டில் இருந்து வரக்கூடிய உயர் அழுத்த மின் கோபுரம்  சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதி பழங்குடியினர் கிராமங்கள் இருளில்  மூழ்கின. மின் பாதை சீரமைப்புப் பணியில் போர்க்கால அடிப்படையில் கேரள மாநில  மின்வாரிய துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags : river ,Bhavani ,Bhavani River Water Release , single, Bhavani River ,Water, Billur Dam, Flood,
× RELATED பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்