×

கோவில்பட்டியில் பால் கொள்முதல் செய்ய மறுப்பு அதிகாரிகளை கண்டித்து மாடுகளுடன் முற்றுகை நடத்த விவசாயிகள் முடிவு

எட்டயபுரம்: தென்மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் சிறுகுறு தொழில்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பால் கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பதால் விவசாயிகளின் துணை தொழிலான கால்நடை வளர்ப்பும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. தென்மாவட்ட விவசாயிகள் பெரும்பாலும் மானாவாரி விவசாயத்தையே நம்பியுள்ளனர். மழை பொய்த்ததால் வருவாய் இழப்பதோடு கடன்படும் நிலையும் உருவாகி விடுகிறது. இந்த சூழலில் பெரும்பாலான விவசாயிகள் பால்மாடு வளர்த்து அதன் மூலம் வரும் பாலை அருகிலுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனை செய்கின்றனர். மாடுகள் பராமரிப்புக்கு தேவையான தீவனம், மருத்துவம் என இதர செலவுகள் தவிர்த்து தங்களது குடும்ப செலவிற்கும் ஓரளவிற்கு வருவாய் ஈட்டுகின்றனர். இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 1956லும், கடலையூரில் 1963லும், குளத்துள்வாய்பட்டியில் 1957லும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. எட்டயபுரம் சங்கத்தில் 375 உறுப்பினர்கள் தினமும் 4500 லிட்டர் பாலும், கடலையூர் சங்கத்தில் 175 உறுப்பினர்கள் 2000 லிட்டர் பாலும், குளத்துள்வாய்பட்டி சங்கத்தில் தினசரி 400 லிட்டர் பாலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

எட்டயபுரம், கடலையூர், குளத்துள்வாய்பட்டி, பிதப்புரம், சிந்தலக்கரை, ராஜாபட்டி, செமப்புதூர், மேலஈரால், ராமனூத்து உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது மாடுகளில் காலை, மாலையில் கறக்கப்படும் பாலை சங்கத்திற்கு விற்பனை செய்கின்றனர். விவசாயிகளிடம் வாங்கிய பாலை கூட்டுறவு சங்க பால் விற்பனையாளர்கள் மூலம் உள்ளுர் மக்களுக்கு விற்பனை செய்தது போக மீதமுள்ள பாலை தூத்துக்குடி மாவட்ட ஆவின் ஒன்றிய கோவில்பட்டி பால் குளிரூட்டும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் ஆவின் நிறுவன அதிகாரிகள் தங்களுக்கு தேவைப்படும்போது ஆவின் குளிரூட்டும் நிலையத்திற்கு அதிகமாக பால் அனுப்ப வேண்டுமென கட்டாயப்படுத்துவதும், மற்ற நேரங்களில் குளிரூட்டும் நிலையத்திற்கு அனுப்பிய பாலை திருப்பி அனுப்புவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் கால்நடை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனிடையே கடந்த சில நாட்களாக ஆவின் நிறுவன அதிகாரிகள், குறைவாக பாலை அனுப்புங்கள் என சங்கங்களை கட்டாயப்படுத்துவதால் விவசாயிகளிடம் இருந்து பாலை குறைவாக பெற்று திருப்பி அனுப்புகின்றனர். இதனால் விவசாயிகள் கறந்த பாலை என்ன செய்வது என்று தெரியாமல் குருதியை பாலாக்கிய பசுவின் தியாகத்தை மறந்து கழிவுநீரை போல் கீழே கொட்டும் அவலநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே விவசாயிகளிம் கறந்த பால் அனைத்தையும் வாங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் கறவை மாடுகளுடன் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறைத்து வாங்க நிர்பந்தம் கடலையூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் பால
முருகன் கூறுகையில், ‘‘கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளிடம் பாலை குறைத்து வாங்க சொல்லி ஆவின் நிறுவனம் கட்டாயப்படுத்துவதால் வேறு வழியின்றி விவசாயிகளிடம் 10 லிட்டருக்கு ஒரு லிட்டர் வீதம் குறைவாக பெற வேண்டியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே விவசாயிகளிடம் பாலை முழுமையாக பெற வேண்டும். மேலும் கோவில்பட்டியில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் 5000 லிட்டர் பால் தேக்கி வைப்பதற்கான வசதிதான் உள்ளது. ஆனால், கோவில்பட்டி சுற்றுவட்டாரங்களில் இருந்து தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் லிட்டர் வரை பால் உற்பத்தி செய்யப்படுவதால் கோவில்பட்டி பால் குளிரூட்டும் நிலையத்தில் கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்’’ என்றார்.

Tags : siege ,Kovilpatti , Refusal ,purchase, milk ,Kovilpatti
× RELATED கோவில்பட்டியில் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வருபவருக்கு வலை