×

நேற்று மாடலிங்; இன்று ஐஏஎஸ்: டெல்லி மாடலிங் அழகி முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை..!!!

டெல்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட 26 பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது. கடந்த ஆண்டு (2019ம் ஆண்டுக்கானது) 829 பதவிகளை  நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 19ம் தேதி வெளியிடப்பட்டது. முதல் நிலை தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 2ம் தேதி நடந்தது. இத்தேர்வை 5.50 லட்சம் பேர் எழுதினர். ஜூலை 12ம் தேதி முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட்  வெளியிடப்பட்டது.

இதில் 11,845 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு செப்டம்பர் 20ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடந்தது. தொடர்ந்து கடந்த ஜனவரி 14ம் தேதி முடிவு வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற 2,304 பேருக்கான  நேர்முக தேர்வு கடந்த பிப்ரவரி, மார்ச்சில் நடைபெற்றது. இந்நிலையி்ல், நேர்காணல் முடிந்ததை தொடர்ந்து, இறுதி தேர்வு முடிவை யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.inல் நேற்று வெளியிட்டது. இதில் அகில இந்திய அளவில்  829 பேர் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில், தமிழகத்தைச் சேர்ந்த பலர் இந்த தேர்வில் வெற்றி பெற்றனர். குறிப்பாக, நடிகர் தமிழ் காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் மகன் முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். தமிழக திரைத்துறையில் உள்ளவரின் மகன்  ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றது இதுவே முதன்முறை.  

இதற்கிடையே, டெல்லியை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவர் டெல்லியில் பட்டப்படிப்பு படித்து அதன் பிறகு இந்தூரில் முதுகலைப்பட்டம்  பெற்றார். கல்லூரி காலத்திலிருந்தே மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் இறுதிப் போட்டி வரை சென்றார். இந்த நிலையில், தனது நீண்ட நாள் கனவான சிவில் சர்வீஸ்  தேர்வு எழுத வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அதற்காக அவர் கடந்த 10 மாதங்களாக வேறு எந்த பணிகளிலும் ஈடுபடாமல் தேர்வுக்கு தயார் ஆனார். தற்போது ஐஸ்வர்யா நீண்ட நாள் கனவு நினைவாகியுள்ளது. நேற்று வெளியான  சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில், ஐஸ்வர்யா முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று 93-வது ரேங்க் பெற்றுள்ளார்.

ஐஸ்வர்யாரா பேட்டி:

’நான் நடிகை ஐஸ்வர்யாராய் போல் மிஸ் இந்தியா, உலக அழகி ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால் மிஸ் இந்தியா போட்டியில் இறுதிவரை வந்தேன். ஆனாலும் எனக்கு சிவில் சர்வீஸ் தேர்வில் பாஸ் ஆக வேண்டும்  என்பதுதான் வாழ்நாள் கனவு. தொடர்ந்து அதற்காக படித்தேன். எந்த பயிற்சி வகுப்புக்கும் செல்லாமல் சமூக வலைதளங்கள், டிவி, செல்போன் என அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு தீவிரமாக படித்து ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி  பெற்றுவிட்டேன்’ என்று கூறியுள்ளார். மாடலிங் ஆக இருந்த ஐஸ்வர்யா தற்போது ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.


Tags : Delhi ,IAS , Modeling yesterday; Today IAS: Delhi modeling beauty wins IAS exam on first attempt .. !!!
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு