×

நாமக்கல்லில் மைக்ரோ நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் தவிப்பு!: தற்கொலைக்கு தூண்டும் வகையில் தவணை வசூல்!!!

நாமக்கல்: மைக்ரோ நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற மகளிர் சுய உதவி குழுவினர் தற்கொலைக்கு தூண்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் இயங்கி வருகின்றன. இதில் பெரும்பாலான பெண்கள் விசைத்தறி தொழில்களை செய்து வருகின்றனர். இதனையடுத்து கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த பகுதியில் விசைத்தறிகள் உட்பட பல தொழில்கள் முடங்கியதால் தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக மகளிர் சுய உதவி குழுவினர், தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற பெண்கள் அசல் மற்றும் வட்டித்தொகையை கட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அரசானது அனைத்து நிதி நிறுவனங்களும் பணத்தை வசூலிக்க சிறிது கால அவகாசம் கொடுக்க அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், வற்புறுத்தி தவணை தொகையை செலுத்துமாறு நிதி நிறுவனங்கள் தங்களை தற்கொலைக்கு தூண்டும் வகையில் நிர்பந்திப்பதாக சுய உதவி பெண்கள் கண்ணீர் மல்க வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் வேலையின்றி தவிக்கும் தங்களுக்கு தகுந்த கால அவகாசம் வழங்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே முசிறியில் சுய உதவி குழுவினை சேர்ந்த பெண்களை ஏமாற்றிய தனியார் தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண்கள் அனைவரும் கோட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். அதாவது முசிறி அருகே உள்ள கரட்டாம்பெட்டி பகுதியை  சேர்ந்த 18 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, திருச்சியை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று இந்தியன் வங்கியின் மூலம் ஒரு குழுவிற்கு 2 லட்சம் வீதம் 18 குழுக்களுக்கு 36 லட்சம் ரூபாய் கடன் பெற்று கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து மகளிர் சுய உதவி குழுவிடம் மாதந்தோறும் ரூபாய் 5 ஆயிரம் தவணை தொகையை தனியார் தொண்டு நிறுவனம் வசூல் செய்துள்ளது. தற்போது கடனை திருப்பி செலுத்துமாறு வங்கியிலிருந்து கடிதம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் திருமதி மல்லிகா தலைமையில் முசிறி கோட்டாட்சியர் சென்று தனியார் தொண்டு நிறுவனத்தின் மோசடி பற்றி கோட்டாட்சியர் துரைமுருகனிடம் மனு அளித்துள்ளனர். அதாவது சில பகுதிகளில் பெண்கள் வேலை இழந்து கடனை கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். மற்றும் சில பகுதிகளில் பணத்தை பறிகொடுத்து பல பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Borrowers ,microfinance institutions ,Namakkal ,suicide , Borrowers in microfinance institutions suffer in Namakkal !: Installment collection to incite suicide !!!
× RELATED நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது