மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சிவாஜிராவ் பாட்டீல் உடல்நலக்குறைவால் காலமானார்: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சிவாஜிராவ் பாட்டீல் உடல்நலக்குறைவால் காலமானார். இந்த தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் மூத்த காங்கிரஸ் தலைவரான சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர்(89) மரத்வாடாவின் லத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அந்த மாநிலத்தில் 1985-1986 வரை முதல்வராக இருந்தார். இவர் மீது மோசடி குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. 1985ம் ஆண்டில் எம்டி தேர்வு எழுதி இருந்த இவரது மகள் மற்றும் நண்பர்களுக்கு கூடுதல் மதிப்பு பெண் பெற்று தேர்வாகும் வகையில் மோசடி செய்ய உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மும்பை உயர்நீதிமன்றமும் அப்போது கடுமையான விதிகளை இவருக்கு எதிராக விதித்திருந்தது.

சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த சிவாஜிராவ் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தொடர் சிகிச்சையை அடுத்து குணமடைந்த சிவாஜிராவ் வீடு திரும்பினார். இந்த நிலையில் மீண்டும் சிறுநீரக தொடர்பான சிக்கல்களால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இறந்ததாக நிலங்கேகரின் குடும்பத்துடன் நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவரது இறுதி சடங்குகள் மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் நிலங்கா நகரில் புதன்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலங்கேகரின் மகன் சம்பாஜி பாட்டீல் பாஜக எம்.எல்.ஏ மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான அரசாங்கத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories:

>