×

பொருளாதாரத்துக்கு கைகொடுக்கும் விவசாயம் டிராக்டர் விற்பனை தொடர்ந்து விறுவிறு

புதுடெல்லி: ஒட்டுமொத்த அளவில் ஆட்டோமொபைல் துறை பின்னடைவை சந்தித்தபோதும், டிராக்டர் விற்பனை கடந்த ஜூலையில் அதிகரித்துள்ளது. பொருளாதார மேம்பாட்டுக்கு விவசாயம் பக்கபலமாக இருக்கிறது என்பதை இது நிரூபித்துள்ளது. பொருளாதார மந்தநிலையால் ஆட்டோமொபைல் துறை சில ஆண்டுகளாகவே பாதிக்கப்பட்டு வந்துள்ளது. அதிலும் ஊரடங்கில் விற்பனை முடங்கி விட்டது. ஆனால், வாகன விற்பனை சரிந்தபோதும், டிராக்டர் விற்பனை அதிகரித்துள்ளது. டிராக்டர் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம், டிராக்டர் விற்பனை கடந்த ஜூலையில் 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. சொனாலிகா டிராக்டர் விற்பனை 72 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுபோல், எஸ்கார்ட்ஸ் நிறுவன டிராக்டர் விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

மகிந்திரா நிறுவனம் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 25,402 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் 19,992 டிராக்டர்கள் மட்டுமே விற்பனையாகின. சொனாலிகா 10,223 டிராக்டர்களையும், எஸ்கார்ட்ஸ் 5,322 டிராக்டர்களையும் விற்பனை செய்துள்ளது.கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் முடங்கியபோதும், விவசாய பணிகள் மட்டுமே எந்த வித தடையும் இன்றி நடந்தன. விவசாயத்தை அதிகம் சார்ந்துள்ள மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொரோனாவால் பெரிய அளவில் பாதிக்கப்படாது என பொருளாதார ஆய்வறிக்கைகள் கூறியுள்ளன. டிராக்டர் விற்பனை இதை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது. கடந்த ஜூன் மாதத்திலும் டிராக்டர் விற்பனை அதிகரித்திருந்தது.

* தொடர்ந்து 9வது மாதமாக உரம் விற்பனை உயர்வு
காரிப் விதைப்பு 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கேற்ப கடந்த ஜூலை மாதத்தில் உரங்கள் விற்பனை 34% உயர்ந்துள்ளது. கடந்த ஜூலையில் 9 மில்லியன் டன் உரங்கள் விற்பனையாகியுள்ளன. இதில், யூரியா மூன்றில் ஒரு பகுதி விற்றுள்ளது. காம்ப்ளக்ஸ் உரம் இரட்டிபாக அதிகரித்துள்ளது. பொருளாதார ஏற்றத்துக்கு விவசாயம் உதவும் என்பதை உரம் விற்பனையும் நிரூபித்துள்ளது.

Tags : Tractor , Economy, Handicraft Agriculture, Tractor Sales
× RELATED புதிய வேளாண் சட்டங்களால் விவசாயம் இனி...