×

தங்கம் கடத்தல் வழக்கில் பகீர் திருப்பங்கள் தீவிரவாதிகளுக்காக துப்பாக்கிகள் கடத்தப்பட்டதா? ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு

திருவனந்தபுரம்: தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரமீஸ் கடத்திய துப்பாக்கிகள் தீவிரவாதிகளுக்காக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இது குறித்து தீவிரமாக விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் என்ஐஏ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. கடத்திய தங்கத்தை விற்று கிடைக்கும் பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை என்ஐஏ கண்டுபிடித்துள்ளது. கைதான ரமீஸ் தீவிரவாத குழுக்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பரில் துபாயில் இருந்து கொச்சி வந்த ரமீஸின் பையில் ஏராளமான துப்பாக்கிகளின் பாகங்கள் இருந்தன. பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளின் தடயவியல் பரிசோதனை முடிவு நேற்று சுங்க இலாகாவுக்கு கிடைத்தது. இதில் அந்த 13 துப்பாக்கிகளும் ஏர்-கன் அல்ல எனவும், அவை நிஜ துப்பாக்கிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரமீஸ் தீவிரவாதிகளுக்காக துப்பாக்கிகளை கடத்தினாரா? என்பதை விசாரிக்க என்ஐஏ தீர்மானித்துள்ளது. ரமீஸை என்ஐஏ காவலில் எடுத்து விசாரித்து வந்தது. விசாரணை காலம் நேற்று முடிவடைந்ததை ெதாடர்ந்து மேலும் அவரது காவலை நீட்டிக்க என்ஐஏ நீதிமன்றத்தில் கோரியது. இதையடுத்து வரும் 7ம் தேதி வரை ரமீஸின் என்ஐஏ காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசியல் பிரமுகருடன் சொப்னாவுக்கு தொடர்பு: தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னாவுக்கு செல்வாக்குமிக்க பிரபல அரசியல் பிரமுகருடன் நெருங்கிய தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் தங்கம் கடத்தலுக்கு பலமுறை உதவியுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கொச்சியில் நடந்த சுங்க இலாகா உயர் அதிகாரிகள் கூட்டத்தில், குறிப்பிட்ட அரசியல் பிரமுகரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கேஸ் டயரி தாக்கல்: சொப்னாவின் ஜாமீன் மனு என்ஐஏ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவரது வக்கீல், ‘தங்கம் கடத்தலில் ‘உபா’ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை,’ என்று வாதிட்டார். இதையடுத்து ‘உபா’ பிரிவில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரங்களையும், கேஸ் டயரியையும் ஆஜர்ப்படுத்த என்ஐஏவுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கேஸ் டயரியை என்ஐஏ நேற்று தாக்கல் செய்தது.  

* அமீரகம் செல்ல அனுமதி கோரியது என்ஐஏ
கடத்தல் தங்கம் திருவனந்தபுரம் தூதரக பொறுப்பு வகிக்கும் அட்டாஷே ராஷித் காமிஸ் அல்சலாமி பெயரில்தான் வந்தது. அவரிடம் விசாரிக்க என்ஐஏ  தீர்மானித்திருந்த நிலையில் அவர் திடீரென துபாய் சென்றுவிட்டார். இந்த நிலையில், துபாய் சென்று விசாரணை நடத்த மத்திய உள்துறையிடம் என்ஐஏ அனுமதி கோரியுள்ளது. தூதரகத்தின் பெயரில் தங்கத்தை அனுப்பியவர்கள் யார்? தங்கம் வாங்க ஹவாலா பணத்தை திரட்டியது யார் என்பன போன்ற விபரங்களை சேகரிக்கவும், ஐக்கிய அரபு அமீரக துணைத்தூதர் மற்றும் அட்டாஷேயிடம் விளக்கம்  கேட்கவும் என்ஐஏ தீர்மானித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய, துபாயில் உள்ள பைசல் பரீதை இந்தியா கொண்டு வரவும் என்ஐஏ திட்டமிட்டுள்ளது.

Tags : Ramis ,Pakir ,terrorists ,NIA , NIA decides to prosecute Rameez in gold smuggling case
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...