×

தனியார் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் திடீர் போராட்டம்: போலீசாருடன் தள்ளுமுள்ளு; குண்டுக்கட்டாக கைது

திருவள்ளூர்: தனியார் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் தங்களுக்கு வேலை வழங்ககோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை குண்டுகட்டமாக இழுத்துசென்று கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் பகுதியில் தனியார் நிறுவனத்தின் கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை அமைப்பதற்காக அதிகத்தூர், மேல்நல்லாத்தூர், பட்டரை, நுங்கம்பாக்கம் ஆகிய 3 கிராம விவசாயகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேலும், அவர்களது குடும்பத்தாருக்கு வேலை வழங்குவதாக தொழிற்சாலை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனடிப்படையில் அவர்களுக்கு வேலையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது பிரான்ஸ் நாட்டு நிர்வாகத்திடம் இந்த தொழிற்சாலை கைமாறியது. இதனால் 22 தொழிலாளர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, முழு முடக்கத்தின் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பு வேலைக்கு சென்றவர்களுக்கு பணி மறுக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 30ம் தேதி தொழிற்சாலையை முற்றுகையிட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், நேற்று மீண்டும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 100க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஏஐடியுசி மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.ரவி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கே.கஜேந்திரன், மாரியப்பன், சரவணன், சீனிவாசன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, புரட்சி பாரதம் கட்சி, பகுஜன் சாமாஜ், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சியினரும் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தொழிற்சாலையை முற்றுகையிட்டு உள்ளே நுழைய முற்பட்டனர்.

அப்போது அவர்களை திருவள்ளூர் போலீஸ் டி.எஸ்.பி. கங்காதரன், மணவழகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையா ஆகியோர் தலைமையிலான போலீசார் தடுத்து குண்டு கட்டாக தூக்கியும், தரதரவென இழுத்து சென்றும் கைது செய்தனர்.
இதனிடையே, கைது செய்து அழைத்து சென்ற காவல்துறையின் வாகனத்தை மறித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 35 பெண்கள் உட்பட 82 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : company ,protest ,land , Private company, land, peasants, struggle, pushing with the police; Bombed, arrested
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...