×

எச்1பி விசாதாரர்களுக்கு கிடையாது அரசு ஒப்பந்த பணிகள் இனி அமெரிக்கர்களுக்கு மட்டுமே: அதிபர் டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்: ‘அமெரிக்காவில் அரசு ஒப்பந்தப் பணிகளில் இனி அமெரிக்கர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும், எச்1பி விசா பெற்றவர்களை பணி அமர்த்தக் கூடாது’ என்ற உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவில் பெருமளவில் பயனடைவது இந்தியாவைச் சேர்ந்த ஐடி ஊழியர்களே. இந்நிலையில், அதிபர் டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே எச்1பி விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகிறார். அமெரிக்காவில் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கொண்ட அவர், கொரோனா பரவலால் இந்தாண்டு இறுதி வரை எச்1பி விசா வழங்குவதை சமீபத்தில் நிறுத்தி வைத்தார்.

இந்நிலையில், அரசு ஒப்பந்த தகவல் தொழில்நுட்ப பணிகளில் எச்1பி விசாதாரர்களை பயன்படுத்தக் கூடாது என்ற நிர்வாக உத்தரவில் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டியில், ‘‘குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் கிடைக்கிறார்கள் என்பதற்காக கடினமாக உழைக்கும் அமெரிக்கர்கள் பாதிக்கப்படுவதை இந்த அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது,’’ என்றார். அடுத்த 120 நாட்களுக்குள் அனைத்து அரசு துறைகளும் எந்தெந்த பிரிவில் பணியாளர்கள் தேவை என்பதை மதிப்பிட்டு அதில் உள்நாட்டவர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

* யாரும் தட்டிப் பறிக்க முடியாது
அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘‘இனி எந்தவொரு அமெரிக்க தொழிலாளரும் பாதிக்கப்படாத வகையில் எச்1பி நெறிமுறைகளுக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறோம். எச்1பி என்பது அதிதிறமை வாய்ந்தவர்களுக்கான உயர் சம்பளத்தில் அமெரிக்க வேலைக்கானதாக இருக்க வேண்டுமே தவிர, அது மலிவான சம்பளத்தில் ஆட்களை பணியமர்த்துவதாகவோ அல்லது அமெரிக்கர்களின் வேலையை தட்டி பறிப்பதாகவோ இருக்க கூடாது,’’ என்றார்.

* இந்தியர்களுக்கு கடும் பாதிப்பு
வெளிநாட்டு நிறுவனங்கள், அமெரிக்கர்களுக்கு அதிக சம்பளம் தர வேண்டுமென்பதால், அவர்களுக்கு வேலை தராமல், குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டு பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதாகவும் தனது பேட்டியில் டிரம்ப் கூறி வருகிறார். டிரம்ப்பின் இந்த உத்தரவால், இந்திய ஐடி ஊழியர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.

Tags : Trump ,H1B investigators ,Americans , H1B investigator, government contract work, no longer American, President Trump
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்