×

பள்ளிக் கட்டணம் செலுத்த பணமில்லாததால் விபரீத முடிவு 2 மகன், மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை: 3 பேரும் கவலைக்கிடம்; தேவகோட்டையில் பரிதாபம்

தேவகோட்டை: பள்ளி கட்டணம் செலுத்த பணமில்லாததால், மகள் மற்றும் 2 மகன்களுக்கு எலிபேஸ்ட் கொடுத்து விட்டு, தானும் சாப்பிட்ட தாய் பரிதாபமாக இறந்தார். 3 குழந்தைகளும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்தச் சம்பவம் தேவகோட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, சிதம்பரநாதபுரம் மெயின் வீதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை வசந்தா. இவரது மகன் ராமதாஸ் (45). இவர் 4 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்து விட்டார். இவரது மனைவி பிரியதர்ஷினி (32). வீட்டின் கீழ்பகுதியில் வசந்தாவும், மாடியில் பிரியதர்ஷினி, மகள் பர்வஹர்ஷினி (16), மகன்கள் நீலகண்டன் (14), ஹரிகிருஷ்ணன் (11) ஆகியோரும் வசித்து வந்தனர்.

காதலித்து திருமணம் செய்த கணவர் இறந்தது பற்றி அக்கம்பக்கத்தினரிடம் அடிக்கடி கூறி பிரியதர்ஷினி கவலைப்பட்டதோடு, மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், குழந்தைகள் படிக்கும் தனியார் பள்ளியில் இருந்து கல்விக் கட்டணம் கட்ட சொல்லி தகவல் வந்தது. தன்னிடம் பணம் இல்லாத நிலையில் செய்வதறியாது தவித்து வந்தார். மேலும் மாமியாருடன் குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. வருமானத்திற்கும் வேறு வழியில்லாததால் குழந்தைகளுடன் தற்கொலை செய்ய பிரியதர்ஷினி முடிவு செய்தார்.

அதன்படி நேற்று காலை எலிபேஸ்ட் வாங்கி வந்த அவர், மகள் மற்றும் 2 மகன்களுக்கும் கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டுள்ளார். வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்காத நிலையில், அருகேயுள்ளவர்கள் சென்று பார்த்த போது நான்கு பேரும் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பிரியதர்ஷினி இறந்தார். மற்ற 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,Devakottai , School fees, tragic end, 2 son, daughter, poison, mother suicide
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை