×

கோவையில் இறந்த இலங்கை தாதா வசித்த வீட்டில் சிபிசிஐடி ஐ.ஜி. சோதனை: முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை

கோவை: கோவையில் இலங்கை தாதா அங்கோட  லொக்கா வசித்த வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் சர்வதேச தாதா அங்கோட லொக்கா (35). அன்டர்கிரவுண்ட் கிங், டிரக் மாபியா என பல அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வந்த இவரின் நிஜ பெயர் சந்தனா லசந்தா பெரரா. கொழும்பு நகரை சேர்ந்த இவர் மீது போதை பொருள் கடத்தல், கொலை என பல வழக்குகள் இருக்கின்றன. கடந்த 2 ஆண்டாக அங்கோட லொக்கா தலைமறைவாக இருந்தார். இவரை பற்றி எந்த தகவலும் வெளியே தெரியாமல் இருந்தது.

இந்தநிலையில், கோவைக்கு தப்பி வந்து பிரதீப் சிங் என்ற பெயரில் உணவு பொருள் சப்ளையராக இருந்து வந்துள்ளார். கடந்த 4-ம் தேதியன்று மாரடைப்பு காரணமாக அங்கோட லொக்கா இறந்ததாக தகவல் வெளியானது. ஆனால், ஆதார் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் போலீசார் விசாரித்ததில், பிரதீப் சிங் என்று இருந்த அங்கோட லொக்கா என தெரியவந்தது. இதன்பின், வக்கீல் சிவகாமசுந்தரி (37), அவரது நண்பர் தியானேஸ்வரன் (33), லொக்காவின் காதலி அமானி தாஞ்சி (27) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் இரவு சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஒப்படைக்கப்பட்டது. இதன்பேரில், சேரன் நகரில் வசித்த லொக்கா வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்த பல்வேறு முக்கிய ஆவணங்கள், ஆதாரங்களை போலீசார் சேகரித்தனர். மருந்து பாட்டில் சிலவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.

இதுதொடர்பாக கோவையில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்த வழக்கை நாங்கள் கையில் எடுத்து ஒருநாள்தான் ஆகிறது. 2 எப்.ஐ.ஆர். பதிவு செய்திருக்கிறோம். இதுதொடர்பான தகவல் திரட்ட டி.எஸ்.பி. ராஜூ மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்போதைக்கு லொக்கா எப்படி இறந்தார்?, கொலை செய்யப்பட்டாரா? என தெரியவில்லை. விசாரணைக்கு பின்னர் படிப்படியாகத்தான் தெரியும். ஆதார் அட்டை, குடியுரிமை உள்ளிட்ட ஆவணங்களை உறுதி செய்யவேண்டியிருக்கிறது. 3 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தால்தான் மேலும் விவரங்கள் தெரியவரும்’’ என்றார்.

* பிரதீப் சிங் யார்?
அங்கோட லொக்கா கோவையில் பிரதீப் சிங் என்ற பெயரில் வசித்து வந்தார். மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரதீப் சிங் ஒருவர் கோவையில் வசித்து வந்துள்ளதாக தெரிகிறது. இவரின் ஆதார் மற்றும் ஆவணங்களை வைத்து அங்கோட லொக்கா பிரதீப் சிங் என பெயர் மாறியுள்ளார். இதற்கு உதவியது சிவகாம சுந்தரிதான். ஆனால், பிரதீப் சிங் இப்போது எங்கே இருக்கிறார்? அவர் யார்? என போலீசாருக்கு தெரியவில்லை. இவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

* இறந்ததாக கூறப்பட்ட பின் தந்தையிடம் பேசிய லொக்கா
இறந்தது அங்கோட லொக்காதானா? என சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த ஜூலை 4ம் தேதி இவர் இறந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் 10 நாளுக்கு முன் அங்கோட லொக்கா தனது தந்தையிடம் செல்போனில் பேசியதாக தெரிகிறது. அவரது தந்தை இதை இலங்கை போலீசாரிடம் கூறியிருப்பதால் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனக்கு பதிலாக வேறு ஒரு நபரை செட்டப் செய்து இறந்து விட்டதாக காட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags : house ,Dada ,Sri Lankan ,CBCID IG ,Coimbatore ,Test , Coimbatore, deceased Sri Lankan Dada, CPCIT IG Trial, trial
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்