×

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: ஐந்தருவியில் காட்டுபன்றி விழுந்து இறந்தது

தென்காசி: குற்றாலம் பகுதியில் பெய்து வரும் சாரல் மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஐந்தருவியில் இன்று காலை காட்டு பன்றி மேலே இருந்து கீழே விழுந்து இறந்தது. குற்றாலத்தில் ஜூன், ஜூலை மாத சீசன் காலத்தில் சாரல் மழை பெய்த நிலையில் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இருந்து சாரல் நன்றாக பெய்து வருகிறது. கடந்த 3 தினங்களாக தினமும் சாரல் பெய்கிறது. இன்று காலை அவ்வப்போது சீரான இடைவெளியில் சாரல் பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயினருவியில் பாதுகாப்பு வளவைத் தாண்டி தண்ணீர் கொட்டுகிறது.

ஐந்தருவியில் 5 பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகிவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. கொரோனா ஊரடங்கு காலமாக இருப்பதால் கடந்த மார்ச் மாதம் முதல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அங்கு சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்காதவாறு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐந்தருவியில் இன்று காலை காட்டுப்பன்றி ஒன்று மேல் இருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காட்டுபன்றி உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர். ஏற்கனவே வெள்ளப்பெருக்கின் போது ஐந்தருவியில் மலைப்பாம்பு, மிளா உள்ளிட்டவை விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Courtallam Falls, Flood, Wild boar
× RELATED நான் முதல்வன் திட்டம் மூலம் 28 லட்சம்...