×

யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு வாழ்த்துகள்! : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

டெல்லி : கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியானது. அதில் தமிழக மாணவர் கணேஷ்குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7ம் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்காக  மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடத்திய போட்டித் தேர்வுகளின் முடிவுகள்  இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்ற 829 பேருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

குடிமைப்பணி தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுமார் 44 பேருக்கும்  எனது வாழ்த்துகள். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கனேஷ்குமார் பாஸ்கர் தேசிய அளவில்  7-ஆவது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும், தேசிய அளவில் 47-ஆவது இடத்தையும் பிடித்துள்ள மாணவி ஐஸ்வர்யா கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் எனக்கு அறிமுகமான குடும்பம்.

அதேபோல், தேசிய அளவில் 36-ஆவது இடத்தை பிடித்துள்ள காரைக்காலைச் சேர்ந்த  மாணவி சரண்யா புதுவையில் முதல் இடத்தை பிடித்துள்ளார். தமிழக அளவில் முதல் இரு  இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிக்கும், புதுவையில் முதலிடம் பிடித்த மாணவிக்கும் எனது சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் குடிமைப் பணி தேர்வுகளில் தமிழகத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். அதற்காக இப்போதிலிருந்தே படிக்கத் தொடங்கி, வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Tags : Civil Service Examinations ,Founder ,UPSC ,Tamil Nadu ,PMK , UPSC, Civil, Service, Exams, Success, Tamil Nadu Students, Greetings, PAC, Founder, Ramadas
× RELATED யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் தேர்வு ஒத்திவைப்பு