×

திருச்சியில் தனியார் மருத்துவமனைகள் மீது புகார்!: கொரோனா இல்லாதவர்களுக்கும் சிகிச்சையளித்து ஆயிரம் கணக்கில் பணம் வசூல்!!!

திருச்சி:  திருச்சியில் சில தனியார் மருத்துவமனைகளும், தனியார் பரிசோதனை கூடங்களும் இணைந்து கொரோனா இல்லாதவர்களுக்கும் தொற்று உள்ளதாக கூறி பல லட்சம் ரூபாய் வரை வசூல் வேட்டையில் இறங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொடர்பாக தவறான தகவல் அளித்து வசூல் வேட்டை நடத்தியதாக கூறி திருச்சியில் உள்ள டாக்டர் டயாபீடெஸ் என்ற ஆய்வகத்திற்கு கடந்த வாரம் சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், சாஸ்திரி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையும் கொரோனா இல்லாத 71 வயது மூதாட்டிக்கு கொரோனா சிகிச்சை அளித்து பல்லாயிரம் ரூபாய் பணம் வசூலித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாதி சிகிச்சைக்கு பிறகு அந்த மூதாட்டியை வலுக்கட்டாயமாக அனுப்பி விட்டதால் அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். பின்னர் உறவினர்கள் யாரும் இன்றி அந்த மூதாட்டி ஆதரவற்றவரைபோல் அடக்கம் செய்யப்பட்டார்.

இதனிடையே அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் மூதாட்டிக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது. இந்த செய்தி அரசு அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதேபோல் திருச்சி பட்டாபிராம் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொற்று இல்லாத 49 வயது பெண்மணிக்கு கொரோனா சிகிச்சை அளித்து பல்லாயிரம் ரூபாய் பணம் பிடுங்கியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த மருத்துவமனைகளும் அங்குள்ள சில நோய் அறிதல் மையங்களும் தங்களுக்குள் ரகசிய கூட்டு வைத்துக்கொண்டு 30 சதவீத கமிஷன் அடிப்படையில் பணம் பார்த்து வருவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Tags : hospitals ,Trichy , private hospitals , Trichy,
× RELATED எட்டயபுரம் அருகே தொட்டால் ‘ஷாக்’...