×

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செல்போன் டவர் சரிந்து விழுந்து ஒருவர் பலி: பராமரிப்பின்மையே காரணம் என பொதுமக்கள் புகார்..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செல்போன் டவர் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்திருக்கிறார். திருப்பூர் - பல்லடம் சாலை திருப்பூரின் பிரதான சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை இருப்பதால் இந்த சாலை எப்போதும் பரபரப்புடன் காணப்படும். இந்நிலையில் திருப்பூர் - பல்லடம் சாலை தமிழ்நாடு திரையரங்கம் அருகே பராமரிப்பின்றி இருந்த செல்போன் டவர் ஒன்று பலத்த காற்றின் காரணமாக சேதமடைந்து சரிந்து விழுந்ததில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த செங்கிஸ்கான் என்ற வடமாநில தொழிலாளி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது செல்போன் டவர் சரிந்து விழுந்ததில் கார் சேதமடைந்தது. தொடர்ந்து காரில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த விபத்து காரணமாக திருப்பூர் - பல்லடம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உயிரிழந்த செங்கிஸ்கானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சரிந்து விழுந்த செல்போன் டவர் கிரேன் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக இரவு நேரத்தில் செல்போன் டவர் அதேபகுதியில் சரிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது சாலையில் போக்குவரத்து இல்லாமையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் திருப்பூரின் பல பகுதியில் இதுபோன்ற செல்போன் டவர்கள் உரிய பராமரிப்பின்றி இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags : Tirupur ,Palladam , Tiruppur, cell phone tower ,Palladam, Tiruppur district,
× RELATED மீன் கடை கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது