×

கடைமடை பகுதிக்கு காவிரி நீர் வராததால் வறண்டு கிடக்கும் தெற்குராஜன் வாய்க்கால் அவல நிலை: விவசாயிகள் வேதனை

கொள்ளிடம்: கொள்ளிடம் கடைமடை பகுதிக்கு பாசனத்திற்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் கடைமடை பகுதியில் வருடந்தோறும் சுமார் 8000 ஹெக்டேர் பரப்பளவில் குறுவை நெற்பயிரும், 12,500 ஹெக்டேர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடியும் செய்யப்படுவது வழக்கம். இந்த வருடத்தில் விவசாயிகள் தற்போது சம்பா சாகுபடிக்கு நிலங்களை தயார் செய்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இதுவரை மேட்டூரிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் கடைமடை பகுதியை வந்தடையவில்லை.

விவசாயத்திற்கு உரிய மழை பொழிவும் இல்லை. மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு இதுவரை மிகவும் முக்கியமான பாசன வாய்க்கால்களாக இருந்து வரும் புதுமண்ணியாறு, தெற்குராசன் வாய்க்கால் மற்றும் பொறை வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களில் தண்ணீர் வந்து சேரவில்லை. மேலும், பிரதான வாய்க்கால்களிலிருந்து பிரிந்து செல்லும் 300க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்களும் இதுவரை தூர்வாரி ஆழ்படுத்தவில்லை.

இதனால், பிரதான வாய்க்கால்களில் தாமதமாக தண்ணீர் வந்தாலும், கிளை வாய்க்கால்களில் பாசனத்திற்கு தண்ணீர் சென்று சேருவது மிகவும் சிரமமான நிலையில் உள்ளது. எனவே, கொள்ளிடம் கடைமடை பகுதி விவசாயிகளின் நலன் கருதி விவசாயத்திற்கு உடனடியாக தண்ணீர் சென்று சேர பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கொள்ளிடம் வட்டார விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவப்பிரகாசம் பிள்ளை மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : canal ,Drought ,Cauvery ,South Kurajan ,catchment area ,shop area , Shop, Cauvery Water W, South Kurajan Canal, Farmers
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...