×

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரியில் இடி, மின்னலுடன் அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை

சென்னை : வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் கர்நாடகா, கேரளா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆந்திரா, தெலங்கானா, உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் கடலோர பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தேனி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை!!


தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல், தென்கிழக்கு கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்க கடலோர பகுதிகள், அந்தமான் நிக்காபோர் கடலோர பகுதிகளுக்கும் அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்!!

இதே போல் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும். திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நெல்லை, குமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ரெட் அலெர்ட் எச்சரிக்கை

கோவா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போல் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக் கூடும் என்பதால் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிகபட்ச மழைப்பொழிவு


தமிழகத்திலேயே அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அப்பர் பவானியில் 31 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அவலாஞ்சி 22 செ.மீ, கூடலூர் 20 செ.மீ, மேல் கூடலூர், வால்பாறை, சோலையார் ஆகிய இடங்களில் தலா 13செ.மீ மழை பதிவானது. தேனி மாவட்டம் பெரியாரில் 12 செ.மீ. சின்னக்கல்லாறு, சின்கோனா, எமரால்டு மற்றும் பந்தலூர் ஆகிய இடங்களில் 11 செமீ மழை பெய்துள்ளது.தேவாலா மற்றும் கிளன்மோர்கனில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.  


Tags : Bay of Bengal ,Nilgiris , Red Alert, Alert, Meteorological Center, Nilgiris, Depression Area
× RELATED வங்கக் கடல் பகுதியில் உருவான...