அயோத்தியில் நாளை நடைபெறும் பூமி பூஜையில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு வெள்ளி நாணயங்கள்!

புதுடெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் மீண்டும் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நாளை நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். கொரோனா பரவல் இருப்பதால் பல்வேறு கெடுபிடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விழா நடைபெறும் பகுதி முழுவதும் தினசரி கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வருவதை முன்னிட்டு அயோத்தி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அயோத்தி சென்று விழா முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார்.

பூமி பூஜை நடைபெற உள்ள ராம ஜென்மபூமி பகுதியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அனுமன் கர்கி கோயிலுக்கும் சென்று அவர் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுக்கு அவர் சில உத்தரவுகளை பிறப்பித்தார். கொரோனாவால் பொலிவிழந்து காணப்பட்ட அயோத்தி நகரம் பூமி பூஜையால் மீண்டும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதற்கிடையே, உபியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அமலில் இருப்பதால் பொது இடத்தில் 5 பேருக்கு மேல் கூடக் கூடாது. இதனால், விழா மேடையில் பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், மகந்த் நிரித்தியா கோபால்தாஸ் ஆகியோர் மட்டுமே பங்கேற்பார்கள்.

பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்க 150 முக்கிய பிரமுகர்களுக்கு சிறப்பு அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழில் குழந்தை ராமரின் படம் இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த அழைப்பிதழ் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், அயோத்தியில் நாளை நடைபெறும் பூமி பூஜையில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளி நாணயங்கள், ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>