×

கொரோனாவை பயன்படுத்தி புதிய கட்டிடங்கள்: ஆக்ரமிப்பால் அழியும் சம்பக்குளம் கால்வாய்: கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை

நாகர்கோவில்:  சம்பக்குளம் கால்வாய் ஆக்ரமிப்பாளர்களால் அழிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி,  கால்வாய் கரைகளை பலப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் விவசாயத்தின் உயிர்நாடியாக விளங்கும் பாசன சானல்கள் ஆக்ரமிப்பாளர்களால் அழிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது சம்பக்குளம் சானல் ஆக்ரமிப்பாளர்களால் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த சானல் தெற்கு சூரங்குடியில் தொடங்கி புத்தளத்தில் முடிவடைகிறது. ஆரம்பிக்கும் இடம் முதல் முடியும் இடம் வரை மொத்த நீளம் 12.400 கி.மீ. ஆகும்.

தெற்கு சூரங்குடி, சுண்டபற்றிவிளை, கொய்யன்விளை, பெரியவிளை, ஈத்தாமொழி, தேரிமேல்விளை, புதூர், மங்காவிளை, நெடுவிளை, நரையன்விளை, நங்கூரான்பிலாவிளை, செம்பொன்கரை, மேல கிருஷ்ணன்புதூர், கீழ கிருஷ்ணன்புதூர், நைனாபுதூர், சேதுபதியூர், தெற்கு பணிக்கன்குடியிருப்பு, கணியான்விளை மற்றும் புத்தளம் ஆகிய ஊர்கள் வழியாக  இந்த சானல் செல்கிறது. கடந்த 2015ம்  ஆண்டில் இந்த சானலின் எல்கையை ெபாதுப்பணித்துறை கணக்கீடு செய்து அளவீடு செய்தனர். ஆக்ரமிப்புதாரர் விபர பட்டியல் மற்றும் வரைபடம், தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்டு தமிழ்நாடு ஆக்ரமிப்புகள் அகற்றுதல் சட்டத்தின் கீழ், சானல் கரையை ஆக்ரமித்து இருந்த கட்டிடங்களை இடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்த சானலின் குறுக்கே 130 சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பொதுப்பணித்துறை அனுமதி பெறாமல் கட்டப்பட்ட பாலங்களும் உண்டு. தற்போதும் பல்வேறு இடங்களில் சானல் கரையை ஆக்ரமித்து தனி நபர்கள் கட்டிடங்கள் கட்டி வருவதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு கிராமங்களில் இருந்து கழிவு நீரும் சம்பக்குளம் சானலில் தான் கலக்கிறது. இதனால் சில இடங்களில் குப்பைகள், கழிவுகள் நிரம்பி, கழிவு நீர் ஓடையாகவும் இந்த சானல் உள்ளது. நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அலட்சியத்தால், குமரி மாவட்டத்தில் பல்வேறு பாசன சானல்கள் இதுபோன்று அழிவதாக விவசாயிகள் கூறி உள்ளனர்.

இது குறித்து பொழிக்கரை அடுத்த புதூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது : தமிழ்நாடு ஆக்ரமிப்புகள் அகற்றுதல் சட்டத்தின் படி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பலமுறை புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மனு அளித்து உள்ளோம். விவசாயிகள் குறை தீர் கூட்டத்திலும் மனு அளிக்கப்பட்டு உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பல்வேறு தகவல்களை பெற்றுள்ளோம். இதை எல்லாம் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்ற பின்னரும் இன்னமும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றனர்.

அனுமதியின்றி பாலம்
சானல் செல்லக்கூடிய சுமார் 20 ஊர்களிலும் சானலின் இரு பக்கமும் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும். சானலின் குறுக்கே அனுமதி பெறாமல் தனி நபர்கள் பாலம் கட்டி உள்ளார்கள். பல வீடுகளில் இருந்து பைப் லைன் மூலம் கழிவு நீர் சானலில் தான் வருகிறது. பொதுமக்கள் சானலில் இறங்கி குளிக்கும் படித்துறைகள், சப்பாத்து (சாய்வு தளம்) மூடப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் குளிப்பதற்கும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் மிகுந்த சிரமப்படுகிறார்கள். தனி நபர்களின் பிடியில் இருந்து சம்பக்குளம் சானலை மீட்க வேண்டும். கொரோனா காரணமாக  விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடக்க வில்ைல. பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லை. கலெக்டரை சந்தித்து புகார் அளிக்க முடிய வில்லை என விவசாயிகள் கூறினர்.Tags : buildings ,Sambakkulam Canal: Invisible Public Works ,canal , Corona, New Buildings, Public Works
× RELATED பயன்படுத்தாமலேயே சேதமடையும் கழிப்பறை கட்டிடங்கள்