சென்னையில் 7 கொலை உள்பட 35 வழக்கில் தேடப்பட்டு வந்தவன் ‘ரவுடி வீரப்பன்’ என அழைக்கப்பட்டவன் துப்பாக்கிமுனையில் அதிரடி கைது

* இன்ஸ்பெக்டரை கொல்ல திட்டம் வகுத்ததால் சிக்கினான்

* ரவுடிகளின் பட்டியலை தயாரிக்கிறது கூடுதல் கமிஷனர் தலைமையிலான தனிப்படை

சென்னை: ரவுடிகளின் வீரப்பன் என்று அழைக்கப்பட்ட பிரபல ரவுடி, இன்ஸ்பெக்டரை கொலை செய்ய திட்டம் தீட்டியதால் தற்போது துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டான். சென்னையில் போலீஸ் உயரதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்ட பிறகு பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகிறவர்களை கைது செய்வது குறித்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஆலோசனை நடத்தி வருகிறார். வடசென்னையில் அதிகமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், சூதாட்டங்கள் நடப்பது தெரிந்ததும், கூடுதல் கமிஷனர் அருண் தலைமையில், இணை கமிஷனர்கள் பாலகிருஷ்ணன், மகேஷ்வரி ஆகியோர் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ரவுடிகளை ஒழிக்கும் பொறுப்பு கூடுதல் கமிஷனர் அருணிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ரவுடிகளின் பட்டியலை அவர் தயாரித்து, அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்தார். அப்போதுதான், அரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராதா(எ)ராதாகிருஷ்ணன், போலீசைப் பழி வாங்க இன்ஸ்பெக்டர் ஒருவரை கொலை செய்யும் திட்டத்தோடு சென்னையில் சுற்றி வரும் தகவல் தெரியவந்தது. இதனால் ரவுடி ராதா குறித்த தகவல் சேகரிக்கப்பட்டது. அவன் மீது 7 கொலை வழக்கு உள்பட 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் 2018ம் ஆண்டு போலீசார் ராதாவை கைது செய்தனர். அப்போது பாத்ரூமில் அவன் வழுக்கி விழுந்ததில் வலது கால், கைது உடைந்தது. தன்னை கைது செய்ததால்தான் இந்த நிலைமை உருவானதாக ராதா கருதினான். இதனால்தான் இன்ஸ்பெக்டரை கொலை செய்ய அவன் திட்டமிட்டான் என்று தெரியவந்தது.

இதனால் அவனைப் பிடிக்கும் திட்டம் ரகசியமாக வைக்கப்பட்டது. இவன் வழக்கமாக 3 நாளைக்கு மேல் ஒரு சிம்கார்டை பயன்படுத்துவதில்லை. எந்த பகுதியில் தங்குகிறானோ, அங்கிருந்து 50 கி.மீ.தூரத்திற்கு சென்று செல்போனை ஆன் செய்வான். கொலை அல்லது கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டவுடன், எந்த இடத்தில் செல்போனை ஆன் செய்தானோ அந்த இடத்துக்கு வந்து மீண்டும் செல்போனை ஆப் செய்து விட்டு 50 கி.மீ.தொலைவில் உள்ள தான் தங்கும் இடத்திற்கு சென்று விடுவான். இதனால் போலீசார், செல்போன் ஆன் செய்த இடத்தில் தேடிக் கொண்டிருப்பார்கள். இப்படித்தான் போலீசாரை இவன் குழப்பி வந்தான்.

மேலும், 2019ம் ஆண்டு இவனுக்கு ஒரு கொலை முயற்சி வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இது தெரிந்ததும், அவன் தலைமறைவாகிவிட்டான். திருப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தான். அடிக்கடி சென்னைக்கு வந்து, குற்றங்களை செய்து விட்டு தப்பி வந்தான். இவன் குற்றங்களுக்கான ஸ்கெட்ச் போடுவதில் கில்லாடி. ஒரு குற்றத்தை செய்வதற்காக, அந்த சம்பவ இடத்தைச் சுற்றி 3 வளையங்களை ஏற்படுத்துவான். ஒரு வளையத்தில் தப்பினாலும் மற்ற 2 வளையத்துக்குள் சிக்கி வைத்து விடுவதில் கில்லாடி. இவன் சம்பவ இடத்துக்கு வரமட்டான். ஆனால் இவன்தான் மூளையாக இருப்பான்.

இவனது குருவான மணிகண்டன்(எ) பன்னி மணிகண்டனை, போலீசார் 2004ம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். அவனது மறைவுக்குப் பிறகு, இவன்தான் தலைவனாக செயல்பட்டு வந்தான். சென்னையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. இதனால் தனது எதிரிகளான டி.பி.சத்திரம் தட்சணாமூர்த்தி, பினு, கனகு ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்தான். இவனை போலீசாரால் பிடிக்க முடியாது. இதனால் ரவுடிகள் அவனை வீரப்பன் என்றே அழைத்து வந்தனர். இந்தநிலையில்தான் தன்னைப் பிடித்த இன்ஸ்பெக்டரை கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்தான் என்று விசாரணையில் தெரியவந்தது.

தனிப்படை போலீசார் சினிமா பாணியில் அவனை பிடிக்க முடிவு செய்தனர். கடந்த 4 நாட்களாக இரவு, பகல் பாராமல், அவன் வந்து செல்லும் இடங்களில் பிச்சைக்காரர்கள் போல தங்கியிருந்து அவனை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் பிடித்தனர். பின்னர் அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டான். ராதாவைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ரவுடிகளின் பட்டியலை கூடுதல் கமிஷனர் அருண் தயாரித்து வருகிறார். ஓரிரு நாளில் ஒவ்வொருவராக போலீசின் கண்ணியில் சிக்குவார்கள் என்கின்றனர் உயர் அதிகாரிகள்.

Related Stories:

>