×

தலைமை செயலாளர் எதிர்மனுதாரராக சேர்ப்பு மணல் திருட்டை தடுக்காத அதிகாரிகள் கண்கள் இருந்தும் பார்வையற்றவர்கள்

* அரசாணை வெறும் காகித அளவில்தான் உள்ளதா?
* அரசுக்கு ஐகோர்ட் கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி

மதுரை: மணல் திருட்டை தடுக்காத அதிகாரிகள் கண்கள் இருந்தும் பார்வையற்றவர்களாக உள்ளதாக தெரிவித்த ஐகோர்ட் கிளை நீதிபதிகள், தமிழக அரசுக்கும் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் புளியங்குளத்தைச் சேர்ந்த ராமசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான விவசாயத் தேவையை வைப்பாறு பூர்த்தி செய்கிறது. வைப்பாற்றின் பல பகுதியில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுகிறது. விளாத்திகுளம் பகுதியில் விவசாயம் நிறைந்துள்ளது. இந்தப் பகுதியில் சவுடு மண் அள்ள சிலர் அனுமதி பெற்று, சட்டவிரோதமாக அதிக ஆழத்திற்கு மணல் அள்ளுகின்றனர். புகார் அளித்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

எனவே, சவுடு மண் அள்ள உரிமம் பெற்றவர்கள் சட்டவிரோதமாக வைப்பாற்று படுகையில் மணல் அள்ளத் தடை விதிக்க வேண்டும் இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வக்கீல் குருநாதன் ஆஜராகி, ‘‘ஒரு ரசீதைக் கொண்டு பல லாரிகளில் மணல் கொண்டு செல்கின்றனர். அதிகாரிகளுக்கு தெரிந்தும் கண்டுகொள்வதில்லை’’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘சட்ட விரோத மணல் குவாரிகள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அரசாணை 135ன் படி மணல் குவாரிகள் அனுமதிப்பது, கண்காணிப்பது தொடர்பாக மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும்.

இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதா? இருந்தால் அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கின்றனர் என்பது தெரியவில்லை. அரசாணை 62ன்படி அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்கிறது. ஆனால் எந்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. பல அதிகாரிகள் கண் இருந்தும் பார்வையற்றவர்களாகவே உள்ளனர். இந்த அரசாணைகள் பெயரளவில் பேப்பரில் மட்டும் தான் உள்ளதா? எனவே, இந்த வழக்கில் தமிழக தலைமை செயலாளர் ஒரு எதிர் மனுதாரராக சேர்க்கப்படுகிறார். இந்த மனுவிற்கு தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர். சட்ட விரோத மணல் குவாரிகள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் வந்து கொண்டே இருக்கிறது அரசாணைகள் பெயரளவில் பேப்பரில் மட்டும் தான் உள்ளதா?


Tags : theft ,Chief Secretary , Chief Secretary, Counter-enrollment, Sand Theft, Officers
× RELATED தென்காசியில் விவசாய நிலத்தை...