கோவையில் தலைமறைவாக இருந்த இலங்கை தாதா கொலை பழிக்கு பழி வாங்கிய காதலி: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

கோவை: கோவை சேரன் மாநகர் பகுதியை சேர்ந்தவர் உணவு பொருள் சப்ளை செய்யும் வியாபாரி பிரதீப் சிங் (35). கடந்த மாதம் 4ம் தேதி இரவு மர்மமான முறையில் இவர் மரணம் அடைந்தார். ஆதார் அட்டை மற்றும் போட்டோ ஆதாரங்களை ஆய்வு செய்தபோது அவை போலியானவை என்பதும், அந்த நபர் உண்மையில் பிரதீப் சிங் அல்ல. இலங்கை போலீசாரால் தேடப்பட்டு வரும் பிரபல தாதா அங்கோட லொக்கா (35) என்பதும் தெரியவந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் கோவைக்கு வந்து பிரதீப் சிங் என்ற வியாபாரியாக மாறியது இலங்கை உளவு பிரிவு அளித்த தகவல் அடிப்படையில் தெரியவே கோவை பீளமேடு போலீசார் விசாரணையை துவக்கினர்.

அப்போது அங்கோட லொக்கா என்ற பெயரை ‘பிரதீப் சிங்’ என மாற்றி ஆவணங்களை, ஆதாரங்களை தயார் செய்தது மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமசுந்தரி (37), அவரது நண்பரான ஈரோடு இந்திரா நகரை சேர்ந்த தியானேஸ்வரன் (33) என்பது தெரியவந்தது. அங்கோட லொக்காவுடன் அவரது காதலியான இலங்கையை சேர்ந்த அமானி தாஞ்சியும் (27) இருந்துள்ளார். அமானி தாஞ்சிதான் தனது கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என சிவகாம சுந்தரிக்கு தகவல் அளித்து மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்துள்ளார். செல்லும் வழியில் இவர் இறந்துவிட்டார். இ பாஸ் வாங்கி சடலத்தை மதுரைக்கு கொண்டு சென்று தகனம் செய்துள்ளனர். மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலி ஆவணம், குடியுரிமை மறைப்பு மற்றும் இறப்பில் மர்மம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த பீளமேடு போலீசார் சிவகாமசுந்தரி, தியானேஸ்வரன், அமானி தாஞ்சி ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அமானி தாஞ்சி 2 மாத கர்ப்பமாக இருந்தார். இவருக்கு நேற்று கருக்கலைப்பு ஏற்பட்டது. எனவே கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த நிலையில் தனது கணவரை கொன்று தன்னை அடைய நினைத்ததால் அங்கோட லொக்காவை, அமானி தாஞ்சி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அமானி தாஞ்சி மீது அங்கோட லொக்காவிற்கு தீவிர காதல் இருந்துள்ளது. எனவே அமானி தாஞ்சியின் கணவரை கொலை செய்து அமானியை தனிமைப்படுத்தி பின்னர் தன் வசப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது கணவரின்  சாவுக்கு காரணமான அங்கோட லொக்காவை பழிவாங்க நினைத்த அமானி தாஞ்சியும், அங்கோட லொக்காவை காதலிப்பதாக நடித்து, ‘பில்லா’ சினிமா பட பாணியில் திட்டம் போட்டு கோவைக்கு வந்துள்ளார். வீட்டில் ஒன்றாக குடித்தனம் நடத்தி, பாசம் காட்டி, கருவை சுமந்து, உணவில் விஷம் வைத்து அங்கோட லொக்காவை கொலை செய்துவிட்டு மாரடைப்பு ஏற்பட்டதாக நாடகமாடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Related Stories:

>