×

புதிய சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை வெளியிட்டு கருத்துக் கேட்பு என்ற கண்துடைப்பு நாடகம் நடத்த முயற்சி: மத்திய அரசுக்கு காஞ்சி வடக்கு மாவட்ட திமுக கண்டனம்

காஞ்சிபுரம்: காஞ்சி வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ ஏற்பாட்டில் நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு நாளான வரும் 7ம் தேதி காலை காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அவரது படத்தை, மலர்களால் அலங்கரித்து அஞ்சலி செலுத்துவது, வடக்கு மாவட்டம் முழுவதும் ஏழை - எளிய மக்கள் மற்றும் நலிவுற்ற திமுகவினருக்கு உணவு, அரிசி, மளிகைப் பொருட்கள் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.

மருத்துவக் கல்வி படிப்பில் அகில இந்திய இட ஒதுக்கீட்டு இடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு உரிமை உண்டு. 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை மனப்பூர்வமாக வரவேற்று, இந்த வரலாற்றுத் தீர்ப்பினை பெறுவதற்கு சட்டப் போராட்டம் நடத்திய திமுக தலைவர்  மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. நாடாளுமன்ற அமர்வு இல்லாத கொரோனா காலத்தில் மத்திய அமைச்சரவை கூடி புதிய கல்வி கொள்கை 2020க்கு ஒப்புதல் அளித்தது, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதற்கு, கண்டனம் தெரிவிப்பதோடு, அரை நூற்றாண்டுக்கு மேலாக நடைமுறையில் உள்ள இரு மொழிக் கொள்கைக்கு விரோதமாக “புதிய கல்வி கொள்கை” மூலம் “மும்மொழித் திட்டம்” செயல்படுத்தப்படும் என அறிவித்ததற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா பேரிடர் கால நெருக்கடியான இந்த அசாதாரண சூழ்நிலையிலும், விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையில் “மின்சார சட்ட திருத்த மசோதா 2020, அத்தியாவசிய திருத்த சட்டம்  வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம் ஆகிய அவசர சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியதற்கும், சுற்றுச்சூழலுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும் மத்திய அரசு தற்போது புதிய சுற்றச்சூழல் வரைவு அறிவிக்கை 2020ஐ வெளியிட்டு அதன் மீது “கருத்துக் கேட்பு” என ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்தும் முயற்சிக்கு காஞ்சி வடக்கு மாவட்ட திமுக கண்டனங்களை தெரிவிக்கிறது.Tags : referendum ,DMK ,Kanchi North District ,Central Government , Kanchi North District DMK condemns govt for attempting to stage a referendum
× RELATED வாக்கெடுப்பு இல்லாமல் மசோதாக்களை...