வடபழனி நகை பட்டறையில் இருந்து 900 கிராம் தங்கத்துடன் தப்பிய ஊழியர் சிக்கினார்: பெங்களூருவில் சுற்றிவளைப்பு

சென்னை: வடபழனியில் உள்ள நகை பட்டறையில் இருந்து 900 கிராம் தங்க கட்டியுடன் தப்பிய ஊழியரை பெங்களூரு விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் கைது செய்தனர். வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவில், கொல்கத்தாவை சேர்ந்த சுபேஷ் என்பவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் கொல்கத்தாவை சேர்ந்த அபிசில் ரகுமான் (26) என்பவர் கடந்த ஓராண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அபிசில் ரகுமானிடம் பட்டறை உரிமையாளர் சுபேஷ் 900 கிராம் தங்க கட்டிகளை கொடுத்து நகை செய்ய கூறியுள்ளார். ஆனால், உரிமையாளர் கொடுத்த தங்க கட்டிகளுடன் அபிசில் ரகுமான் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து சுபேஷ் வடபழனி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்படி போலீசார் தங்க கட்டியுடன் மாயமான ஊழியரை தேடி வந்தனர்.

இதற்கிடையே அபிசில் ரகுமான் பெங்களூரு தப்பி சென்று அங்கிருந்து சொந்த மாநிலம் மேற்கு வங்கத்திற்கு விமானம் மூலம் செல்ல முடிவு செய்துள்ளார். அதன்படி பெங்களூரு விமான நிலையம் சென்றபோது, அவரது உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது 900 கிராம் தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையில், அபிசில் ரகுமான் வடபழனி நகை பட்டறையில் இருந்து தங்க கட்டிகளை திருடி வந்தது தெரியந்தது. உடனே, சுங்கத்துறை அதிகாரிகள் சம்பவம் குறித்து சென்னை காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி வடபழனி காவல் நிலையத்தில் இருந்து தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று, தங்க கட்டியுடன் கைது செய்யப்பட்ட அபிசில் ரகுமானை அழைத்து வர உள்ளனர், என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: