×

ஊரடங்கில் வேலை இல்லாததால் கர்ப்பிணி மனைவியுடன் சேர்ந்து ஆடுகளை திருடி விற்றவர் கைது

திருவொற்றியூர்: ஊரடங்கால் வேலை இல்லாததால் 9 மாத கர்ப்பிணி மனைவியுடன் ஆடு திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் கொரோனா பரவலை தடுக்க நேற்று முன்தினம் தளர்வு இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அன்று  இரவு கத்திவாக்கம் சாலை வழியாக கர்ப்பிணியுடன் பைக்கில் வந்த ஒருவர், திடீரென பைக்கை நிறுத்திவிட்டு, சாலையோரம் படுத்துக் கிடந்த ஆடுகளை பிடித்து பைக்கில் ஏற்றினர். இதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் ஓடிவந்து, அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் எண்ணூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், தண்டையார்பேட்டையை சேர்ந்த கார்த்தி (34), அவரது மனைவி காவேரி (28) என்பது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கைது குறித்து போலீசார் கூறியதாவது:
தனியார் நிறுவனம் ஒன்றில் கார்த்தி டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். இவரும், எண்ணூர் பகுதியை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் காவேரி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்துகொண்டு திருவல்லிக்கேணியில் வீடு வாடகை எடுத்து வசித்து வருகின்றனர். தற்போது, காவேரி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். ஊரடங்கால் இருவருக்கும் வேலை இல்லாமல் குடும்பம் நடத்த சிரமப்பட்டனர்.

இதனால் கார்த்தி,  முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் சாலையில் சுற்றித்திரியும் ஆடுகளை திருடிச் சென்று, தண்டையார்பேட்டை ஆர்கே நகர் பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் ரூ.3 ஆயிரம் வீதம்  விற்று,  அதனை வைத்து குடும்பம் நடத்தியுள்ளார். போலீசார் சந்தேகப்படாமல் இருக்க நிறைமாத கர்ப்பிணியான தன் மனைவியை உடன் வைத்துக் கொண்டு பைக்கில் சென்று, ஆடுகளை திருடியுள்ளார். இதுவரை 10க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து நிறைமாத கர்ப்பிணியை மனிதாபிமான அடிப்படையில் அவருடைய உறவினர் வீட்டிற்கு அனுப்பிய போலீசார், அவருடைய கணவன் கார்த்தியை மட்டும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : In the curfew, pregnant wife, stealing goat, seller arrested for lack of work
× RELATED முதியவரிடம் வழிப்பறி