8,000 பேர் வெளியேற்றம் கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத் தீ

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 20 ஆயிரம் ஏக்கருக்கு பரவியுள்ள காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிவர்சைட் கவுண்டி வனப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. ஒரு சில மணி நேரங்களில் மளமளவென பரவிய தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது என்று கலிபோர்னியா வனத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வனப் பணிகள் துறை செய்தி தொடர்பாளர் லிசா கோக்ஸ் கூறுகையில், ``முதலில் 700 ஏக்கர் பரப்பளவில் தீ  பரவியது. 1,300க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களை கொண்டு காட்டுத் தீயை  கட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், திங்கள்கிழமை காலை நிலவரப்படி 5 சதவீத தீ மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. செங்குத்தான, கரடுமுரடான மலைப்பகுதி என்பதால் தீயணைப்பு வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் அருகில் செல்ல முடியவில்லை. தீயணைப்பு அதிகாரிகள் மவுண்ட் சான் கார்கோனியா மலைப்பகுதி வரை தீயை பரவ விட்டனர். ஏனெனில், கட்டுக்கடங்காத தீ பரவிய நிலையில் வீரர்களை அனுப்ப அரசு விரும்பவில்லை.

தீ பரவியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றார். இந்த காட்டுத்தீயில் இரண்டு கட்டிடங்கள் முழுவதும் எரிந்து நாசமானது. அவை இரண்டும் வீடுகளா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. காட்டுத்தீ தொடர்ந்து பற்றி எரிவதால் அப்பகுதியில் உள்ள 8,000 மேற்பட்டோர் வேறு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பற்றி எரியும் காட்டுத் தீயினால் அருகில் உள்ள பால்ம் ஸ்பிரிங் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

Related Stories:

>