×

ஆரணி பேரூராட்சியில் திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்: மூடி அமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாயில் மூடி அமைக்கப்படாததால் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால், இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சியில் வியாபாரிகள், விவசாயிகள், மாணவ-மாணவிகள் என  சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும், இந்த பகுதியில் அரசு மருத்துவமனை மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளது.  இதில், பஜார் பகுதியில்  கடை மற்றும் வீடுகளில் இருந்து வெளியறும் கழிவுநீர் சாலையில் விடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் கொசு உற்பத்தியாகும் அபாயம் ஏற்பட்டது.

இதனால், அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், கழிவுநீர் கால்வாய் மற்றும் தார்ச்சாலை ஆகியவை  ஒரு கிலோ மீட்டர் தூரம் கழிவுநீர் கால்வாய் மற்றும் தார்ச்சாலை ரூ.1 கோடியில் அமைக்க பேரூராட்சி முடிவு செய்து பணியை தொடங்கியது. இந்த பணிகள் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இங்குள்ள அரசு மருத்துவமனை முன்பும் இந்த கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இதில், கால்வாய்க்கு மூடி அமைக்காததால், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் கால்வாயை கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், அவ்வழியே செல்லும் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் நோயாளிகள் ஆகியோர் கால்வாயில்  விழுந்து காயம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, இந்த கால்வாயின் மீது விரைந்து மூடி அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : municipality ,Sewage canal ,Arani , Arani Municipality, open, sewerage canal
× RELATED ஜோலார்பேட்டை அருகே குழந்தைகளை...