மானாமதுரை அருகே சேதமடைந்த சாலையால் கிராம மக்கள் கடும் அவதி; அதிகாரிகள் கவனிப்பார்களா?

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கீழப்பிடாவூருக்கு செல்லும் ரோடு குண்டும், குழியுமாக இருப்பதால் ஐந்து கிராம மக்கள் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மானாமதுரை அருகே கீழப்பிடாவூர் கிராமம் உள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட கீழமாயாளி, பனைக்குளம், வெட்டிக்குளம், கீழப்பெருங்கரை, ஒத்தவீடு, கீழப்பிடாவூர் உள்ளிட்ட கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மானாமதுரை- தாயமங்கலம் செல்லும் ரோட்டில் இருந்து பிரியும் கிராமச்சாலை ரோடு கீழப்பிடாவூருக்கு செல்கிறது.

விலக்கு ரோட்டிலிருந்து ஊருக்குள் செல்லும் ரோடு வரைஆங்காங்கே கற்கள் பெயர்ந்தும், ரோட்டின் ஓரங்களில் அரிப்பு ஏற்பட்டும், மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் டூவீலர்களில் கூட செல்ல முடியாத அளவிற்கு மோசமாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் நடந்து செல்பவர்கள், சைக்கிளில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைந்து செல்வதாகவும், அவசர நேரத்தில் கூட ஆட்டோக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வர மறுப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆகவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் கிராம மக்களின் நலன் கருதி விரைவில் இந்த ரோட்டை புதுப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,‘‘கீழப்பிடாவூரில் இருந்து மானாமதுரைக்கு தினமும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் ஆட்டோ, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வாகனமும் எளிதாக சென்றுவர முடியவில்லை. சைக்கிள், இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் பள்ளங்களில் விழுந்து தடுமாறுகின்றனர். மழைக்காலங்களில் குளம்போல் தேங்குவதால் அவசர சிகிச்சைக்கு செல்லமுடியாத நிலை உள்ளது. எனவே இந்த ரோட்டை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’என்றனர்.

Related Stories:

>