×

திருமயம் அருகே பைபாஸ் சாலையோரம் நிறுத்தப்படும் சரக்கு லாரிகளால் விபத்து அபாயம்: வாகனஓட்டிகள் அச்சம்

திருமயம்: திருமயம் அருகே பைபாஸ் சாலையோரம் நிறுத்தப்படும் சரக்கு லாரிகளால் விபத்து நடக்கும் சூழல் உருவாகியுள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே சரக்கு வாகனம் நிறுத்த இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் செல்லும் பைபாஸ் சாலையில் காட்டுபாவாபள்ளிவாசல் அருகே தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான குடோன் இயங்கி வருகிறது. இங்கு புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து தானியங்கள் ஏற்றி வருவதும் இங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கு தானியங்கள் எடுத்துச் செல்வதற்கும் தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் வருகின்றன.

இதனிடையே ஒரே சமயத்தில் 20க்கும் மேற்பட்ட லாரிகள் குடோனுக்கு வருவதால் சரக்கு ஏற்ற, இறக்க கால தாமதமாகிறது. இதனால் லாரிகள் காத்திருக்க அப்பகுதியில் போதுமான இட வசதி ஏதும் இல்லாத நிலையில் லாரிகள் பைபாஸ் சாலையில் வரிசை கட்டி நிற்கின்றன. இது பைபாஸ் சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்காக ஒதுக்கப்பட்ட சாலையை மறைத்து இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பைபாஸ் சாலையின் நடுவே செல்ல வேண்டி உள்ளது. இதனால் அப்பகுதியில் விபத்து நடக்கும் சூழல் அதிகரித்துள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமயம் அருகே அரசு குடோனுக்கு வரும் சரக்கு லாரிகள் காத்திருக்க இடவசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : bypass road ,Motorists ,Thirumayam ,accident , Thirumayam, Bypass Road, Freight Trucks, Accident Risk, Motorists
× RELATED டிரைவர் மீது தாக்குதல்