×

பிரதமருக்கு மட்டுமே பாதுகாப்பு தருவதால் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணிக்கை பாதியாக குறைப்பு: 200 பேர் பழைய பணிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

புதுடெல்லி: பிரதமருக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்குவதால் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்பிஜி) வீரர்கள் எண்ணிக்கையை பாதியாக குறைக்கும் நடவடிக்கை தொடங்கியது. முதல்கட்டமாக, 200 வீரர்கள் பழைய படைப்பிரிவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். கடந்த 1984ல் பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர்களின் பாதுகாப்புக்காக சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்பிஜி) கடந்த 1985ல் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிரதமர்களுக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு இருந்த நிலையில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின், பிரதமரின் குடும்பத்தினருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்க வகை செய்யப்பட்டது. இதன்படி, சோனியா மற்றும் குடும்பத்தினருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு தரப்பட்டது.

இதற்கிடையே, முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பை ரத்து செய்து கடந்த ஆண்டு மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்தது. இதனால் தற்போது பிரதமர் மோடி ஒருவருக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இப்படைப்பிரிவில் சுமார் 4,000 வீரர்கள் உள்ளனர். பிரதமர் ஒருவருக்கு மட்டுமே பாதுகாப்பு தருவதால், எஸ்பிஜி.யில் இவ்வளவு வீரர்கள் தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இப்படையில் இருந்து வீரர்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன்படி, முதல் கட்டமாக 200 வீரர்கள் அவர்களின் பழைய பணிக்கே திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். வரும் நாட்களில் மேலும் படை வீரர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும் 50-60 சதவீதம் குறைவான வீரர்களே எஸ்பிஜி.யில் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

மோடிக்கு 2,000 வீரர்கள்
* எஸ்பிஜி.யில் இருக்கும் கமாண்டோ வீரர்கள், அதிநவீன ஆயுத பயிற்சிகளை பெற்றவர்கள்.
* இவர்களின் பயிற்சிக்காக ஒவ்வொருவருக்கும் பல லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
* மீதமுள்ளவர்கள் ரயில்வே பாதுகாப்பு படை, ராஜஸ்தான் போலீஸ், உளவுப் பிரிவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
* எஸ்பிஜி.யில் இருந்து திருப்பி அனுப்பப்படும் சிறப்பு கமாண்டோ வீரர்கள், அவர்களின் பழைய படைப்பிரிவில் சிறப்பு பணிகளில் பயன்படுத்தப்பட உள்ளனர்.
* இவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்படுவதால், பிரதமர் மோடியின் பாதுகாப்பில் இனி 2 ஆயிரம் கமாண்டோ வீரர்கள் மட்டுமே ஈடுபட உள்ளனர்.

Tags : personnel ,half ,Special Security Forces , Prime Minister, Defense, Special Security Forces soldiers, number, 200 men, old task
× RELATED சத்தீஸ்கரில் நடந்த என்கவுண்டரில் 29 நக்சல்கள் சுட்டுக்கொலை..!!