×

ஊர் மக்கள் ஒதுக்கி வைத்ததால் விபரீதம் கொரோனாவில் இருந்து மீண்ட தம்பதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை

திருமலை: ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், தர்மவரம் நகரை சேர்ந்தவர் பனிராஜ் (45), வெல்ல வியாபாரி. இவரது மனைவி சிரிஷா. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகன் உள்ளான். சில வாரங்களுக்கு முன் பனிராஜின் தாய், கொரோனா தொற்றால் இறந்தார். இதனால், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில், பனிராஜ், சிரிஷாவுக்கு தொற்று உறுதியானது. அவர்கள் அரசு தனிமை முகாமில் சிகிச்சை பெற்று குணமாகி, சில நாட்களுக்கு முன் வீடு திரும்பினர். அதன் பிறகு, பனிராஜ் தனது கடைக்கு சென்று வியாபாரத்தை பார்க்க தொடங்கினார்.

ஆனால், அவரிடம் அங்குள்ள கடைக்காரர்கள் பேசாமல் ஒதுங்கினர். வாடிக்கையாளர்களும் அவரது கடைக்கு வருவதை தவிர்த்தனர். அவருக்கு கடன் கொடுத்தவர்கள், உடனடியாக தரும்படி தொந்தரவு கொடுத்தார்கள். இதனால், பனிராஜ் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, மனைவியிடம் கூறி வேதனை அடைந்தார். இதேபோல், சிரிஷாவும், தன்னுடன் அக்கம்பக்கத்தினர் பேசுவதற்கு தயக்கம் காட்டுவதாக கூறி கதறி அழுதார். இதனால், விரக்தியடைந்த தம்பதியினர் நேற்று முன்தினம் மாலை தங்கள் வீட்டின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : suicide , Villagers, tragedy, corona, overcrowded couple, floor, jumping suicide
× RELATED பெரம்பலூர் அருகே விவசாய நிலத்தில்...