வாடிக்கையாளர்கள் வரவில்லை; ஆர்டர் குறைவு ரக் ஷா பந்தன் பண்டிகை களையிழப்பு ரூ.5000 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்பு: இனிப்பு உற்பத்தியாளர்கள் கவலை

புதுடெல்லி, ஆக.3: இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக ரக்  ஷா பந்தன் பண்டிகைக்கு இனிப்பு ஆர்டர் போதுமான அளவு இல்லை  என இனிப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று ரக்ஷா பந்தன். சகோதர சகோதரிக்கிடையே பந்தத்தை பலப்படுத்தும் வகையில் கொண்டாடப்படும் பண்டிகைதான் இது. உடன் பிறந்த சகோதரனுக்கு மட்டுமின்றி, சகோதரனாக பாவிக்கும் ஆண்களுக்கும் பெண்கள் ராக்கி கட்டி விடுகின்றனர். இனிப்புகளை வழங்குகின்றனர். ஆண்டுதோறும் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக எல்லா பண்டிகை கொண்டாட்டங்களையும் போலவே ரக் ஷா பந்தனும் களையிழந்து காணப்படுகிறது. இதுகுறித்து இனிப்பு மற்றும் கார பலகாரம் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் இயக்குநர் பெரோஸ் நக்வி கூறியதாவது: கடந்த ஆண்டு ரக் ஷா பந்தனுக்கு நாடு முழுவதும் சுமார் ரூ.10,000 கோடிக்கு இனிப்புகள் விற்கப்பட்டன. இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் ரூ.5,000 கோடிக்கு மட்டுமே விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு திங்கட்கிழமை ரக் ஷா பந்தன் வருகிறது.

வார இறுதி விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு அதிகம். மாவட்ட அளவிலும் கட்டுப்பாடுகள், தளர்வுகள் மாறுபடுகின்றன. எனவே, கடையை திறப்பதில் குழப்பம் உள்ளது. இதனால், பெரும்பாலானோர் போதுமான அளவுக்கு உற்பத்தி செய்து இருப்பு வைக்கவில்லை. ஆண்டு இனிப்பு விற்பனையில் ரக் ஷா பந்தன் முதல் கிருஷ்ண ஜெயந்தி வரையிலான காலக்கட்டத்தில் 25 சதவீதம் நடக்கிறது. இந்த ஆண்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அரசுகள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காமல் நிர்வாக குழப்பம் செய்தது விற்பனையில் அதிக பாதிப்பு ஏற்பட காரணமாகிவிட்டது என்றார்.

* ரக் ஷா பந்தன் இனிப்பு விற்பனை, கடந்த ஆண்டு ரூ.10,000 கோடி, இந்த ஆண்டு இது ரூ.5,000 கோடியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* ஆண்டு முழுவதும் நடக்கும் இனிப்பு விற்பனையில் ரக் ஷா பந்தன், கிருஷ்ண ஜெயந்தியில் மட்டும் 25% நடக்கிறது.

* சில மாநிலங்களில் ஊரடங்கு விதிகளில் ஏற்பட்ட குழப்பத்தால் பலர் இனிப்புகளை முன்கூட்டியே உற்பத்தி செய்யவில்லை.

Related Stories: