×

மாஜி பஞ். தலைவர் தம்பி படுகொலையை தொடர்ந்து மோதல் 25 படகுகள் தீ வைத்து எரிப்பு, வீடுகள் சேதம்: கடலூர் அருகே பதற்றம்-போலீஸ் குவிப்பு

கடலூர்: கடலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் தம்பி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அப்பகுதியில் இருந்த 25 படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும், வீடுகள், பைக்குகள் சேதப்படுத்தப்பட்டது. அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் அடுத்த தாழங்குடா மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாசிலாமணி. இவர் குண்டு உப்பலவாடி முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். இவரது தம்பி மதிவாணன்(36). இவர் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலையாக வெளியூர் சென்றுவிட்டு பைக்கில் ஊர் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து ஒரு கும்பல் வந்துள்ளது. இதைக் கண்ட அவர் பைக்கை நிறுத்தி நீங்கள் யார், எதற்காக என்னை பின்தொடர்ந்து வருகிறீர்கள்? என கேட்டுள்ளனர். அப்போது, அந்த கும்பல் திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கொலை செய்ய முயன்றனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த மதிவாணன் அவர்களிடம் இருந்து தப்பியோடினார். அந்த கும்பல் அவரை விரட்டி சென்று கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதில், ரத்த வெள்ளத்தில் மதிவாணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற கடலூர் புதுநகர் போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மாசிலாமணி தரப்பினருக்கும், பஞ்சாயத்து தலைவராக உள்ள சாந்தி தரப்பினருக்கும் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனால், கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக, அப்பகுதியை சேர்ந்த 60 பேர் மீது வழக்குப்பதிந்து 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த 25 படகுகளுக்கு தீ வைக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த 6 வீடுகள், பைக்குகள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டது. அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளளனர்.

Tags : Thampi ,Cuddalore ,houses ,Panch. ,assassination , Former Panch. Leader's brother, assassination, clash 25 boats, set on fire, houses damaged, Cuddalore, police concentrated
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...