×

தரமற்ற போர்வையில் தயாரிக்கப்பட்ட புதிய கொள்கை: டாக்டர் க.திருவாசகம், முன்னாள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்

புதிய தேசிய கல்வி கொள்கை என்பது நிச்சயம் தேவை. ஆனால் தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையில் மாற்றம் என்ற பெயரில் நிச்சயமாக பாராட்ட கூடிய சில நன்மைகளும் இருக்கின்றன. அடிப்படையாக கல்வி அனைவருக்கும் போய் சேர வேண்டும். தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். என்பதற்கான முழுமையான உத்தரவாதம் இதில் கிடையாது. இதற்கான சில உதாரணங்கள், முதலாவதாக உயர் கல்வியை பொறுத்தமட்டில் 3, 4 ஆண்டுகள் என பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த 4 ஆண்டு என்று பிரிக்கப்பட்டதற்கான அடிப்படை காரணமே வசதியானவர்களின் பிள்ளைகளுக்காகத்தான், வசதியானவர்களின் பிள்ளைகள் உயர்கல்வியை (முதுகலை) குறிப்பாக அமெரிக்காவில் தான் படிப்பார்கள். அப்படி அவர்கள் அங்கே படிக்க செல்லும் போது, இளங்கலை 4 ஆண்டு படித்து இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் மூன்று ஆண்டு என்பதால், அவர்களுக்கு சிரமமாக இருந்தது. இதனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 4 ஆண்டு படிப்பு அவர்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால், தனது பிள்ளைகள் விரைந்து படிப்பை முடித்து பட்டதாரியாகி வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கும் ஏழைகளுக்கு இது கஷ்டமாக இருக்கும்.

மும்மொழி கொள்கை என்று மற்றும் ஒரு மொழியை - சமஸ்கிருதத்தை திணிக்கிறார்கள். அதில் அவர்கள் சொல்லும் பதில் என்னவென்றால் நாங்கள் தான் தாய் மொழியில் படிக்க சொல்லி விடுகிறோமே, மேலும் ஒரு மொழியை படித்தால் என்ன என்று கூறுகிறார்கள். இப்போது 3 மொழிகள் என்று சொல்லிவிட்டு, எங்கெல்லாம் சமஸ்கிருத படிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறதோ, அந்த கல்லூரி பல்கலைகழகங்களுக்கு ரூ.5 கோடி சலுகை வழங்கப்படும் என்று அறிவிப்பார்கள். அங்கு ஆசிரியர் நியமிக்க சம்பளம் கொடுக்கப்படும் என்று இரண்டாவது சலுகை வரும், அங்கு படித்தால் வேலை வாய்ப்பு என்று கூறுவார்கள். இது முழுமையான ஏமாற்று வித்தை.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வரும் என்று கூறியுள்ளனர். சந்தோஷமான விஷயம் தான். ஆனால் இந்த பல்கலைகழகங்கள் யாருக்கு கல்வி கொடுக்கும். இப்போதே சாதாரண குடும்பத்தில் இருந்து ஏழை எளிய மக்கள் கல்லூரி படிப்பு பெற கஷ்டமாக உள்ளது. காரணம் அவர்களின் பொருளாதாரம். எனவே இது பணக்காரர்களின் பிள்ளைகளுக்கு தான் உதவும். இரண்டாவது அந்த பல்கலைக்கழகத்தில் நம் நாட்டின் ஆசிரியர்களை வேலைக்கு எடுப்பார்களா, அப்படி எடுத்தால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இருக்குமா. ஏதோ உள்நாட்டு பல்கலைக்கழக தரம் குறைந்து விட்டது போலவும், கல்வி கீழே உள்ளது போலவும் உள்ளது. வெளிநாட்டு பல்கலைகழகம் அங்கேயே இருக்கட்டும், வசதி உள்ளவர்கள் போய் படித்துக்கொள்ளட்டும். சுந்தர் பிச்சை, அப்துல் கலாம் எந்த வெளிநாட்டு கல்விநிலையத்தில் படித்தார்கள். அவர்கள் சாதிக்கவில்லையா? எனவே வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பது உள்நோக்கம் கொண்டது.

அடுத்து நுழைவு தேர்வு. ஏற்கனவே நீட் வைத்து ஏழை மாணவர்களுக்கு கிடைக்காமல் செய்து விட்டனர். கலை அறிவியல் மற்றும் இன்ஜினியருக்கு நுழைவு தேர்வு வைத்தால், கல்லூரி படிப்பவர்களின் சதவீதம் குறையும். எப்படி இடம் கிடைக்கும். ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி கனவாக மாறிவிடும். சிறப்பான விஷயம் ஜிடிபியில் 6 சதவீதம் வழங்கி உள்ளனர். இது போன்ற சில சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், இக்கல்வி கொள்கை தரமற்ற போர்வையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார். அடிப்படையாக கல்வி அனைவருக்கும் போய் சேர வேண்டும். தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் இதற்கான முழுமையான உத்தரவாதம் இந்த புதிய கல்விக் கொள்கையில் கிடையாது.

* அறியாத வயதில் பொதுத்தேர்வு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்:  அன்புமணி, பாமக இளைஞர் அணி தலைவர்
இந்தியாவை உலகின் அறிவுசார் வல்லரசாக உயர்த்துவதுதான் புதிய தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அந்த நோக்கத்தை இந்தக் கொள்கை நிறைவேற்றுமா என்பது அதை மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு செயல்படுத்தப் போகின்றன என்பதில் தான் அடங்கியுள்ளது. இந்த கொள்கையில் வரவேற்கப்பட வேண்டிய முதலாவது அம்சம் கல்விக்கான அரசின் ஒதுக்கீட்டை நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில், 6 விழுக்காடாக விரைவில் உயர்த்த வேண்டும் என்பது. அரசு பள்ளிகளின் கட்டமைப்புகளை காலத்தின் தேவைக்கு ஏற்ப உயர்த்த இது மிகவும் அவசியம் ஆகும்.

இது 52 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, அப்போது கோத்தாரி ஆணையத்தின் சிறந்த திட்டங்கள் செயல்படுத்தப்படாததற்கு காரணம் நிதிப்பற்றாக்குறை தான். இப்போது கல்விக்கான ஒதுக்கீடு ஜிடிபி மதிப்பில், 6 விழுக்காடாக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டிருக்கும் போதிலும் அந்த இலக்கு எப்போது எட்டப்படும்? எந்த ஆதாரங்களில் இருந்து நிதி திரட்டப்படும் என்பது குறித்து எந்த குறிப்பும் ஆவணத்தில் இல்லை. 6 சதவீதம் நிதி ஒதுக்கப்படாவிட்டால், கல்விக்கொள்கையின் இலக்குகளை எட்ட முடியாமல் போய்விடும்.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி இப்போது 8ம் வகுப்பு வரை வழங்கப்படும் இலவசக் கல்வி, 12ம் வகுப்பு வரை நீட்டிக்கப்படுவதும், 5ம் வகுப்பு வரை தாய்மொழிவழிக் கல்வி கட்டாயமாக்கப்படுவதும் வரவேற்கப்பட வேண்டியவை. தாய்மொழிவழிக் கல்வியை தமிழகத்தில் அடுத்து 8ம் வகுப்பு வரையிலும், பின்னர் படிப்படியாக பட்டப்படிப்பு வரையும் நீட்டிக்க திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலைக் கல்வியில் தொழிற்பயிற்சி அறிமுகம் செய்யப்படுவது என்னைப் பொறுத்தவரை வரவேற்கப்பட வேண்டியதாகும். ஆனால், இளம் வயதிலேயே தொழிற்பயிற்சி கற்றுத் தருவது குலக்கல்வி முறைக்கு இட்டுச் செல்லக்கூடும் என்று எழுப்பப்படும் ஐயங்கள் புறக்கணிக்கப்படக் கூடியவை அல்ல.

வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களை இந்தியாவிற்குள் ஈர்க்கும் நோக்கத்துடன் ஒரு கல்வி நிறுவனம் ஒரு வகையான படிப்பை மட்டும் வழங்கக்கூடாது. பல வகையான படிப்புகளை வழங்க வேண்டும். 4 ஆண்டு கால பட்டப்படிப்பில் மாணவர்கள் விரும்பும் ஆண்டில் விலகிக் கொள்ளலாம் என்பன உள்ளிட்ட திட்டங்கள் பாராட்டத்தக்கவை. ஆனால், இந்தியாவில் உயர்கல்வி முழுக்க முழுக்க தனியார் மயமாகிவிடும் என்ற மோசமான நிலைக்கு இந்த திட்டங்கள் அழைத்துச் சென்று விடக் கூடாது. புதியக் கல்விக் கொள்கையில் மிகவும் ஆபத்தானதாக நான் பார்ப்பது 3,5,8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை நடத்தும் திட்டம் தான். அறியாத வயதில் பொதுத்தேர்வு நடத்துவது என்பது கல்வி வளர்ச்சிக்கு வழிவகுக்காது, வீழ்ச்சிக்கு தான் வழிவகுக்கும்.

அதேபோல், மும்மொழிக் கொள்கை சமஸ்கிருதத் திணிப்புக்கு வழிவகுக்கக்கூடும் என்பதாலும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பன்முகத்தன்மையை சிதைக்கும் என்பதாகும் அவை கைவிடப் பட வேண்டும். புதிய கல்விக்கொள்கை நகர்ப்புறங்களுக்கும், தனியார் கல்வி நிறுவன நலன்களுக்கும் சாதகமாக இந்தக் கொள்கை அமைந்திருப்பதாக நான் கருதுகிறேன். மாணவர்களின் உடல்நலனைப் பேணிக்காப்பதற்கான விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டங்கள் இடம்பெறாததையும் ஒரு குறையாக பார்க்கிறேன்.

இது போன்ற குறைகள் களையப்பட்டால் இக்கொள்கை கல்வி வளர்ச்சிக்கு வழிவகுக்கும். கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயமில்லை. அதேநேரத்தில் மாநில அரசுகள் அவற்றின் தேவை சார்ந்த கல்விமுறையை கடைபிடிக்க கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு முன்வர வேண்டும். கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயமில்லை. அதேநேரத்தில் மாநில அரசுகள் அவற்றின் தேவை சார்ந்த கல்விமுறையை கடைபிடிக்க கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு முன்வர வேண்டும்.

Tags : K. Thiruvasakam ,Vice Chancellor ,Chennai ,University , Non-standard blanket, new policy, Dr. K. Thiruvasakam, former Vice Chancellor, University of Chennai
× RELATED புதிய கால்பந்து அணி வேல் எப்சி அறிமுகம்