×

உயர் அதிகாரிகளிடம் அதிகாரப்போட்டி அறநிலையத்துறை புதிய கமிஷனர் நியமனம் எப்போது?: நிர்வாக பணிகள் முற்றிலும் முடக்கம்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் கமிஷனராக பணீந்திர ரெட்டியை கடந்த 2018 டிசம்பர் 29ம் தேதி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் அவர், அறநிலையத்துறை ஆணையராக பொறுப்பேற்ற பிறகுதான் நூற்றாண்டு பழமையான கோயில்களின் திருப்பணிகளை கண்காணிக்க மாநில அளவில் குழு, மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டன. இந்த குழுவின் பரிந்துரையின் பேரிலேயே கோயில் திருப்பணிகள் தற்போது வரை நடந்து வருகிறது. மேலும், கோயில் நிலங்களில் சமூக விரோதிகள் ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில் ஓய்வு பெற்ற வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைத்து கோயில் நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் விளைவாக கோயில்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் மீட்கப்பட்டன. மேலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து கோயில் நகை, சிலைகளின் விவரங்களை ஆவணங்களை பதிவு செய்யவும், அவற்றை இணையதளத்தில் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டன. மேலும், அறநிலையத்துறைக்கென பிரத்யேக தொலைக்காட்சியை தொடங்குவதற்கான ஏற்பாடுகளும் நடந்தன. அதே நேரத்தில் கோயில் நிர்வாக பணிகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய கமிஷனர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக, 5 முதல் 10 கோயில்களுக்கு ஒரு செயல் அலுவலர் கவனிக்கும் நிலைதான் இன்றளவும் உள்ளது. அதேபோன்று, காலியாக உள்ள உதவி ஆணையர், துணை ஆணையர் பணியிடங்களையும், நகைகளை சரிபார்க்கும் அலுவலர் பணியிடங்களை நிரப்பாததால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கான நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டிக்கு அறநிலையத்துறை ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

இந்நிலையில், கோயில்களில் பாதுகாப்பை பலப்படுத்த திருக்கோயில் பாதுகாப்பு படை அமைக்கும் திட்டமும் தற்போது வரை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் கோயில் கடைகளின் வாடகை நிர்ணயத்தில் தற்போது வரை குழப்பம் உள்ள நிலையில் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டும் நடவடிக்கை எடுத்தபாடில்லை. இச்சூழ்நிலையில், கமிஷனர் பணீந்திர ரெட்டி கடந்த ஜூன் 18ம் தேதி வருவாய்த்துறை நிர்வாக ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து புதிதாக அறநிலையத்துறைக்கு ஆணையர் நியமிக்கப்பட வேண்டும்.

ஆனால், பணீந்திர ரெட்டியிடம் தற்போது கூடுதலாக அறநிலையத்துறை ஆணையர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் வருவாய்த்துறை சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அவரால் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அறநிலையத்துறை ஆணையர் இல்லாததால் உயர் அதிகாரிகள் மத்தியில் அதிகாரப் போட்டி நிலவுகிறது. இதனால், எந்த அதிகாரியின் பேச்சை கேட்பது என்பது தெரியாமல் ஊழியர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். ஆணையரின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாகவும் ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags : commissioner ,Treasury , When will the new commissioner of the Treasury be appointed ?: The executive functions will be completely frozen
× RELATED அறநிலையத்துறைக்கு புதிய கமிஷனர்...