×

தமிழகம் முழுவதும் தளர்வில்லா முழு ஊரடங்கால் சாலைகள், மார்க்கெட்டுகள் வெறிச்சோடின

சென்னை: தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கால் நேற்று சாலைகள், மார்க்கெட்டுகள் என அனைத்தும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 7ம் கட்டங்களாக ஆகஸ்ட் 31ம் தேதி வர சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆகஸ்ட் 1ம் முதல் 31ம் தேதி வரை உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்த தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று எந்த தளர்வின்றி முழு ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டது.

இதனால் தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில் காய்கறி மார்க்கெட், கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. பால், மருந்து, பத்திரிகை விற்பனை மட்டும் சில மணி நேரங்கள் நடந்தது. அவசர மருத்துவ சேவையை தவிர மற்ற வாகனங்களுக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அனுமதி அளிக்கப்பட்ட வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன.முழு ஊரடங்கால் சென்னை, விழுப்புரம், கடலூர், மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், சேலம், நெல்லை, தூத்துக்குடி போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள்,மேம்பாலங்கள் அனைத்தும் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

மருந்து கடைகள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. சென்னையை பொறுத்தவரையில் முக்கிய சாலைகளான பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, காமராஜர் சாலை, அண்ணாசாலை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற முக்கியமான சாலைகள் உட்பட 193 இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டனர். தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றிய நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதமும் விதிக்கப்பட்டது.

Tags : Roads ,Tamil Nadu , Tamil Nadu, the whole curfew, roads, markets, deserted
× RELATED குளித்தலை பகுதியில் 6 மாதமாக...