பெயின்டர் தீக்குளித்து தற்கொலை புழல் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: கமிஷனர் அதிரடி உத்தரவு

சென்னை: வீட்டு வாடகை பிரச்னையில் பெயின்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் புழல் இன்ஸ்பெக்டர் பென்சாம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கொரோனா ஊரடங்கால் வேலையின்றி பலர் வீடுகளில் முடங்கி உள்ளனர். அந்த வகையில் கொளத்தூர் வினாயகபுரத்தை சேர்ந்த பெயின்டர் சீனிவாசன்(40), வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். வேலை இல்லாததால் வீட்டின் வாடகை கொடுக்க முடியாமல் சீனிவாசன் இருந்துள்ளார். இதனால் வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரனுக்கும், சீனிவாசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரன், புழல் காவல்நிலையத்தில் சீனிவாசன் மீது புகார் அளித்தார். பொதுவாக வாடகை வீட்டில் வசித்து வரும் நபர்களிடம் வீட்டின் உரிமையாளர்கள் வாடகையை கெட்டு தொந்தரவு செய்யக் கூடாது என்றும், அவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பக் கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் புழல் இன்ஸ்பெக்டர் பென்சாம், வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் வாடகை வீட்டில் உள்ள சீனிவாசனை வெளியேறும்படி கூறி மிரட்டி விட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சீனிவாசன், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார். இதில் 86 சதவீதம் தீக்காயங்களுடன் சீனிவாசன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து எழும்பூர் மாஜிஸ்திரேட் சிகிச்சை பெற்று வரும் சீனிவாசனிடம் நேரடியாக வாக்குமூலம் பெற்றார். அதில், வீட்டை காலி செய்ய கோரி வீட்டின் உரிமையாளர், இன்ஸ்பெக்டர் பென்சாம் உடன் வந்து தன்னை அடித்து துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். பின்பு சீனிவாசன் நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே மேற்கண்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் பெயின்டர் தற்கொலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  அதன்படி உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில் புழல் இன்ஸ்பெக்டர் பென்சாம் அரசு உத்தரவை மீறி வீட்டின் உரிமையாளருக்கு ஆதரவாக வாடகை வீட்டில் இருந்து சீனிவாசனை காலி செய்யக்கோரி அழுத்தம் கொடுத்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து விசாரணை அறிக்கையை போலீஸ் கமிஷனரிடம் உயர் அதிகாரிகள் சமர்ப்பித்தனர். அதன்படி போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று அதிரடியாக புழல் இன்ஸ்பெக்டர் பென்சாமை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Related Stories:

>