×

தமிழக அரசு ஊழியர்களுக்கு குடியிருப்பு கட்ட ஒதுக்கிய ரூ.22 கோடி நிதி ஜெயலலிதா நினைவிட பணிக்காக மாற்றம்: வேலையை அவசரமாக முடிக்க திட்டம்; பகீர் தகவல்கள் அம்பலம்

சென்னை, ஆக.3: அரசு ஊழியர் குடியிருப்பு கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.22 கோடி நிதியை ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்காக அவசர அவசரமாக தமிழக அரசு மாற்றம் செய்துள்ளது. பணிகளை வேகமாக முடித்து நினைவிடத்தை செப்டம்பரில் அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், நினைவிட கட்டுமான பணிக்கு ரூ.50.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, ஓராண்டிற்குள் பணிகளை முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

கட்டுமான பணிகள் 2018 மே 7ம் தேதி  தொடங்கினாலும் பினீக்ஸ் பறவை வடிவமைப்பு பணிகளை தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், நினைவிட பணிகளை வேகமாக முடிக்க காலதாமதத்தால் கூடுதலாக ₹7 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த நிதி அரசு தனியாக ஒதுக்கீடு செய்யாமல் சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டுமான பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ₹93 கோடியில் இருந்து மடைமாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், அவசரமாக முடிக்க வேண்டியிருப்பதால், இந்த நிதியை எடுத்து கொண்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா நினைவிடம் அமைத்தல் தொடர்பாக கடந்த 2019 அக்டோபர் 23ம் தேதி நடைபெற்ற பொதுப்பணித்துறையின் 326வது ஒப்பந்த ஒதுக்கீட்டு குழு கூட்டத்தின் நடவடிக்கை குறிப்பின் படி ஏற்கனவே, ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையான ரூ.50 கோடியே 80 லட்சத்துடன் தற்போது கூடுதலாக தேவைப்படும் ரூ.7 கோடியே 116 லட்சத்து 14 ஆயிரத்து 524க்கு நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது. தற்போது ரூ.50.80 கோடியில் ரூ.35.13 கோடி செலவிடப்பட்டுள்ளது. செலவிடப்படாத மீதத் தொகை அரசுக்கு ஒப்படைப்பு செய்யப்பட்ட நிலையிலும் இக்கட்டுமானம் விரைவில் நிறைவு செய்யப்பட வேண்டிய நிலையிலும்,

2020-21 வரவு செலவு திட்டத்தில் தாடண்டர் நகரில் அரசு ஊழியர் குடியிருப்பு அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் இருந்து ரூ.15 கோடியே 67 லட்சத்து 38 ஆயிரம் மறு ஒதுக்கீடு செய்யுமாறு முதன்மை தலைமை பொறியாளர் கேட்டு கொண்டுள்ளார். அவை அரசின் பரிசீலனைக்கு பின்னர் இக்கோரிக்கை ஏற்கப்படுகிறது. அதன்பேரில், கூடுதலாக வழங்க வேண்டிய ரூ.7 கோடியே 16 லட்சத்து 14 ஆயிரத்து 524 உடன் ரூ.15 கோடியே 67 லட்சத்து 38 ஆயிரம் சேர்த்து மொத்த தொகையான ரூ.22 கோடியே 83 லட்சத்து 52 ஆயிரத்து 524 தாடண்டர் நகர் அரசு ஊழியர் கட்டுமான பணிக்கான ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து மாற்றம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு ரூ.50.08 கோடி நிதி ஒதுக்கீடு.
* இந்த நிதியை அரசு தனியாக ஒதுக்கீடு செய்யவில்லை.
* அவசரமாக முடிக்க வேண்டியிருப்பதால், இந்த நிதியை எடுத்துக்கொண்டதாக அரசு விளக்கம் கூறியிருக்கிறது.
* சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டுமான பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.93 கோடியில் இருந்து மடைமாற்றம் செய்தது.

Tags : government employees ,Tamil Nadu ,Jayalalithaa , Tamil Nadu government employee, Rs 22 crore allocated for housing construction, Jayalalithaa memorial work, change
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்