×

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரூ.137 கோடியில் அமைக்கப்பட்ட அரசு மருத்துவமனையில் ஏழை, நடுத்தர மக்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுமா?: விவிஐபிக்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதாக குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்ட்டிடியூட்டில் அரசு சார்பில் ரூ.137 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக புதிய மருத்துவமனை அமைக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில், தற்போது விவிஐபிக்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டி வளாகத்தில் தேசிய முதியோர் நல மருத்துவமனை கட்டிடம், கொரோனா சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவமனையாக தமிழக அரசு ரூ.136.86 கோடி செலவில் மாற்றியது. இந்த மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மாதம் 9ம் தேதி திறந்து வைத்தார்.

மூன்று மாடிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் 750 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 70 படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கைகள், வென்டிலேட்டர் பொருத்தும் வசதியுடன் 200 படுக்கைகள் மற்றும் 250 சாதாரண படுக்கைகள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மருத்துவமனையில், கொரோனா தொற்று பாதித்து, மூச்சுத்திணறலால் வருகிறவர்களுக்கு சிகிச்சை அளிக்க 25 வென்டிலேட்டர்கள் தயாராக உள்ளன. நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், ஒரே நேரத்தில் 20 பேர் அமர்ந்து டி.வி. பார்க்கும் வசதியும், 30 பேர் புத்தகம் படிக்கும் நூலக வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த மருத்துவமனையில் 3வது மாடியில் வீடியோ காட்சிகள் மூலம் யோகா பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வைபை வசதி உள்ளதால், நோயாளிகள் தங்கள் குடும்பத்தினரிடம் வாட்ஸ் அப் மூலம் பேச முடியும். நோயாளிகளுக்குத் தேவையான சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட அனைத்து பரிசோதனை வசதிகளும் ஒரே இடத்தில் அமைந்து உள்ளது. இந்த சிறப்பு மருத்துவமனை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் என்று கூறப்படுகிறது. இந்த மருத்துவனையில் 100 டாக்டர்கள் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக இது அமைந்துள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், கிண்டியில் உள்ள இந்த அரசு மருத்துவமனையில் சாதாரண ஏழை, நடுத்தர மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற சென்றால் அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்கள் ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். கிண்டி, கிங் இன்ஸ்ட்டிடியூட்டில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் விவிஐபிக்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களில் யாருக்காது கொரோனா தொற்று ஏற்பட்டால் மட்டுமே உள்நோயாளிகளாக சிகிச்சை அளிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக அமைச்சர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் உறவினர்கள் உள்ளிட்ட அரசு மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு முற்றிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு பணத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் ஏழை, நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்களையும் சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டும். வசதி படைத்தவர்களால் தனியார் மருத்துவமனைகளில் கூட சிகிச்சை பெற முடியும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அமைச்சர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் உறவினர்கள் உள்ளிட்ட அரசு மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு முற்றிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tags : government hospital ,VIPs ,corona patients ,poor , Corona patient, to be treated, Rs 137 crore, government hospital, poor, middle class people will be treated ?, VIP, treatment, charge
× RELATED மன்னார்குடி அரசு மருத்துவமனையில்...