×

பாங்காங்க் திசோ ஏரி பகுதியில் நீடிக்கும் மர்மம் 40,000 வீரர்களை சீனா வாபஸ் பெறாதது ஏன்? நவம்பரில் தாக்குதல் நடத்த திட்டமா?; உச்சக்கட்ட உஷார் நிலையில் இந்தியா

புதுடெல்லி: கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் ஒரு சில இடங்களில் இருந்து தனது படையை வாபஸ் பெற்றுள்ள சீன ராணுவம், பாங்காங்க் திசோ ஏரிப் பகுதியில் மட்டும் தொடர்ந்து 40 ஆயிரம் வீரர்களை தொடர்ந்து குவித்து வைத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்பகுதியில் குளிர்காலம் வரும் நவம்பரில் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது, இந்தியா மீது தாக்குதல் நடத்த அது திட்டமிட்டு இருக்கலாம் என கருதப்படுவதால், எல்லையில் ஏற்கனவே குவிக்கப்பட்ட இந்திய வீரர்களை அங்கேயே நிலைநிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மே 5ம் தேதி இந்திய - சீன ராணுவ படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் அமைதியை மீட்க இருதரப்பு ராணுவமும் கடந்த 2 மாதமாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. கடந்த 14ம் தேதி நடந்த 4ம் கட்ட ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை 15 மணி நேரம் நடந்தது. இதைத் தொடர்ந்து, ஹாட்ஸ்  ஸ்பிரிங்ஸ், கோக்ரா போஸ்ட் போன்ற பகுதிகளில் இருந்து தனது படையை சீனா முழுமையாக வாபஸ் பெற்றது.

ஆனால், பாங்காங்க் திசோ ஏரிப் பகுதியில் இருந்து மட்டும் விலகாமல், தனது படையை 2 கிமீ தூரம் மட்டுமே பின்வாங்கி இருக்கிறது. மற்றப்படி படைகளின் அளவையோ, ஆயுதங்களின் எண்ணிக்கையோ குறைக்கவில்லை. எனவே, இந்தியாவும் அதற்கு போட்டியாக எல்லை பகுதியில் 2 தினங்களுக்கு முன்புகூட, கூடுதலாக 35 வீரர்களை அனுப்ப முடிவு செய்தது. கல்வான் மோதலைத் தொடர்ந்து சீனா ஹாட்ஸ் ஸ்பிரிங்ஸ், கோக்ரா போஸ்ட், பாங்காங்க் திசோ ஏரி ஆகிய பகுதிகளில் அத்துமீறி படைகளை குவித்தது. இதில் ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா போஸ்ட் பகுதியில் படைகளை  முழுமையாக வாபஸ் பெற்றுவிட்டதாக சீனா கூறினாலும், ஒரு சில இடங்களில் முகாம்கள் அகற்றப்படவில்லை. அதே சமயம்,  பாங்காங்க் திசோ ஏரிப் பகுதிகளைப் பற்றி சீனா எதையும் உறுதிப்படுத்தவில்லை.

பாங்காங்க் திசோ ஏரிப் பகுதி உள்ளங்கையோடு சேர்ந்த விரல்கள் போன்ற வடிவமைப்பை கொண்ட பகுதி. இதனால், ‘பிங்கர்’ (விரல்கள்) என பெயரிடப்பட்டுள்ளது. மொத்த 8 பிங்கர்கள் உள்ளன. அதில், இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைக் கட்டுப்பாடு கோடு பிங்கர் 4 பகுதியில் பிரிப்பதாக சீனாவும், பிங்கர் 8 பகுதியில் பிரிப்பதாகவும் இந்தியாவும் கூறி வருகின்றன. மே 5ம் தேதி கல்வான் மோதல் நடந்தது பிங்கர் 4 பகுதியில்தான். அந்த மோதலைத் தொடர்ந்து பிங்கர் பகுதிகளில் பதுங்கு குழிகளை அமைத்த சீன ராணுவம், கூடுதல் படைகளை குவித்தது.

இங்கு சுமார் 40,000 சீன ராணுவத்தினர் முகாம் அமைத்து இருப்பதாகவும், தாக்குதல் நடத்த சரியான நேரம் பார்த்து இருப்பதாகவும் இந்திய ராணுவ அதிகாரிகள் கூறி உள்ளனர். இங்கிருந்துதான் சீனா தனது படைகளை விலக்கிக் கொள்ள வேண்டுமென பேச்சுவார்த்தையில் வலியுறுத்தி உள்ளது. பிங்கர் பகுதியில் சீன படைகள் பின்வாங்காவிட்டால், எதிர்காலத்தில் மீண்டும் கல்வானைப் போன்ற ஒரு மோதல் தவிர்க்க முடியாததாகி விடும் என கருதப்படுகிறது. லடாக் பிராந்தியத்தில் அடுத்த சில மாதங்களில் குளிர்காலம் தொடங்க உள்ளது.

நவம்பர், டிசம்பரில் அங்கு மைனஸ் 20 டிகிரி செல்சியசிஸ் கடும் குளிர் நிலவும். அந்த சந்தர்ப்பத்தில் இந்தியா மீது தாக்குதல் தொடுக்க சீனா திட்டமிட்டு இருக்கலாம் என்று சந்தேகம் நிலவுகிறது.  இதற்காகவே, பிங்கர் பகுதியில் மட்டும் சீனா தொடர்ந்து தனது படையை குவித்து இருப்பதாக கருதப்படுகிறது.  இதற்கு பதிலடி தர இந்திய ராணுவமும் அப்பகுதியில் தயார் நிலையிலேயே உள்ளது. ஏற்கனவே, அதிநவீன போர் விமானங்களையும், பீரங்கி படைகளையும் லடாக்கில் இந்தியா நிறுத்தி இருக்கிறது. அதோடு, சீனாவுக்கு எரிச்சலூட்டும் வகையில் இந்திய பெருங்கடலிலும் கடற்படையை நிலை நிறுத்தி இருக்கிறது. மேலும், ‘எதற்கும் தயார்’ என்ற ரீதியில், இந்தியாவும் உச்சக்கட்ட உஷார்நிலையில் இருக்கிறது.

* ‘வாபஸ் பெற்றே ஆக வேண்டும்’ 5ம் கட்ட பேச்சில் திட்டவட்டம்
இந்திய - சீன ராணுவத்துக்கு ஏற்கனவே 4 கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், 5ம் கட்ட பேச்சுவார்த்தை எல்லை கட்டுப்பாடு கோட்டின் சீன பகுதிக்கு  உட்பட்ட மோல்டோவில் நேற்று காலை நடந்தது. இந்திய தரப்பில் லெப்டினன்ட்  ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், பாங்காங்க் திசோ ஏரியை ஒட்டிய பிங்கர் பகுதிகளில் இருந்தும், மற்ற பிற பகுதிகளில் இருந்தும் சீனா தனது படையை முழுமையாக விரைவில் வாபஸ் பெற  வேண்டுமென இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், எல்லையின் ரெட் லைன் குறித்து சீன ராணுவத்திற்கு இந்திய தரப்பு விளக்கம் அளித்ததுடன் லடாக் எல்லையில் அமைதியை நிலைநாட்ட ஏற்கனவே இருதரப்பில் ஒப்புக்கொண்ட விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது. இந்த பேச்சுவார்த்தை குறித்து இந்திய ராணுவ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘‘இரு தரப்பும் முழுமையாக படைகளை வாபஸ் பெற ஒப்புக் கொண்டுள்ளன. ஆனாலும்,  இந்த சிக்கலான பணி. இதை கவனமான ஆய்வு செய்ய வேண்டியதும் அவசியம்,’’  என்றனர்.

 உணவுப் பொருட்கள் குவிப்பு பாதுகாப்பு உடைக்கு ஆர்டர்
* லடாக்கில் குளிர்காலம் மிகவும் மோசமாக இருக்கும் என்பதால், அங்கு குவிக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் வீரர்களுக்கு தேவையான குளிர் பாதுகாப்பு உடைகளை வாங்குவதற்கு, மத்திய அரசு துரித நடவடிக்கையை எடுத்துள்ளது.
* மேலும், வீரர்களுக்கு பல மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களையும் சேமித்து வருகிறது.
* சீனாவை இந்தியா இந்தளவுக்கு தைரியத்துடன் எதிர்த்து நிற்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்காக, இந்தியாவுக்கு பாராட்டுகளும் குவிகின்றன.


Tags : soldiers ,Bangkok ,area ,China ,Thiso Lake ,India ,Bangkok Tsho Lake , Bangkok Thiso Lake area, lasting mystery, 40,000 soldiers, China not withdrawn, why ?, plan to attack in November ?; India on high alert
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்