×

திருவள்ளூர் - செங்குன்றம் சாலையில் சுற்றுத்திரியும் மாடுகள்: அதிகரிக்கும் விபத்துகள்

திருவள்ளூர்: திருவள்ளூரில் இருந்து செங்குன்றம் செல்லும் சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை அதிக வாகன போக்குவரத்து கொண்ட சாலை என்பதால், தடையில்லா துரிதமான வாகன போக்குவரத்து ஏற்படுத்தும் விதமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் அதிக வேகத்தில் சென்று வருகின்றன. இச்சாலையில், திருவள்ளூர், ஈக்காடு உட்பட பல கிராமங்களில் வசிக்கும் சிலர் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுகின்றனர். இவை கட்டுப்பாடின்றி நெடுஞ்சாலையில் சுற்றித் திரிவதால் தற்போது பெரும் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. அதிவேகமாக வாகனங்கள் சென்று வரும் நிலையில், எதிர்பாராத விதமாக திடீரென சாலையில் குறுக்கே மாடுகள் வந்து விடுகின்றன.

அப்போது திடீரென செய்வதறியாது திக்கு முக்காடும் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் பல நேரங்களில் விபத்தினை சந்திக்க நேரிடுகிறது. விரைவான போக்குவரத்து ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட மாநில நெடுஞ்சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் தற்போது வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, விபத்துகளை தவிர்க்க, நெடுஞ்சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை போலீசார் பிடித்து, கால்நடை பட்டியில் அடைப்பதோடு, அதன் உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Tiruvallur-Chengunram ,Accidents , Tiruvallur - Chenkunram road, stray cattle, increasing accidents
× RELATED க.பரமத்தி மயான சாலையில் விபத்து ஏற்படுத்தும் பள்ளங்கள்