×

கொரோனா பரிசோதனை ஆடைகள் அப்புறப்படுத்துவதில் அலட்சியம் ஸ்ரீ பெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு: திறந்தவெளியில் கிடக்கும் ஆடை உபகரணங்கள்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி காமராஜர் நகரில் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 50க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்த மக்கல் பல்வேறு பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வருகிறது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகமாகி வருவதை, தடுக்க சுகாதார துறை வருவாய் துறை, காவல் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களை பரிசோதனை செய்ய ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆங்காங்கே பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை செய்யபட்டு வருகிறது.

தற்போது கொரோனா பரிசோதனை செய்யும் செவிலியருக்கு பாதுகாப்பு கவசம், மேலாடை, கையுறை ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களும் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பயன்படுத்திய பாதுகாப்பு உபகரணங்கள், ஆடைகளை பாதுகாப்பாக ஒதுக்குபுறமான பகுதியில் கொட்டி எரிக்க வேண்டும். ஆனால் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பயன்படுத்திய பாதுகாப்பு உபகரணங்களை மருத்துவமனையில் குப்பை தொட்டிகளில் வைத்துள்ளனர். இதனால் மருத்துவமனைக்கு வந்து செல்லும் பொது மக்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளது. இதனால் ஊழியர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மேலும் வார கணக்கில் குப்பை தேங்கி கிடக்கின்றன. ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அலட்சிய போக்கை கைவிட்டு சுகாதார பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sri Perumbudur Government Hospital ,Sriperumbudur Government Hospital , Corona examination, clothing, negligence, Sriperumbudur Government Hospital, health disorder
× RELATED காஞ்சிபுரம் மாவட்டம்...