×

பேய் விரட்டுவதற்காக இளம்பெண்ணை சரமாரி அடித்து, உதைத்த மந்திரவாதி: கணவன், மாமியார் முன்னிலையில் அராஜகம்

திருமலை: தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் மல்லேஷ். இவரது மனைவி  ரஜிதா. இவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு  காதலித்து திருமணம் செய்துள்ளனர். 2 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ரஜிதாவின் செயல்பாடுகள் வித்தியாசமாக இருப்பதாகவும், அவருக்கு பேய் பிடித்திருக்கலாம் என அவரது மாமியாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதை தனது மகனிடமும் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் அதே பகுதியை சேர்ந்த பேய் ஓட்டும் மந்திரவாதி என அழைக்கப்படும் சுமார் 25 வயதுள்ள வாலிபர் ஒருவரை இவர்கள் வரவழைத்தனர். அவர் டி-ஷர்ட், நைட்பேண்ட் அணிந்து மாடர்னாக வந்தார். அவர் ரஜிதாவை அழைத்து பேச்சுக்கொடுத்துள்ளார்.

ரஜிதாவுக்கு பேய் பிடித்திருப்பதாக அவரது கணவர் மற்றும் மாமியாரிடம் கூறியுள்ளார். எனவே பேய் ஓட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த ரஜிதா, ‘எனக்கு பேய் எதுவும் பிடிக்கவில்லை, நலமாகத்தான் இருக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள்’ என கணவர் மற்றும் மாமியாரிடம் கெஞ்சினார். ஆனால் அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து மந்திரவாதி தனது பணியை தொடங்கினார். கணவர், மாமியார் முன்னிலையில் ரஜிதாவின் தலைமுடியை பிடித்து கைகளால் சரமாரி தாக்கியுள்ளார். மேலும் சுவற்றில் தள்ளியுள்ளார். சுமார் அரை மணி நேரம் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

அடி, உதை தாங்க முடியாத ரஜிதா கட்டிலில் மயங்கி விழுந்தார். இந்த காட்சிகளை அந்த மந்திரவாதி, தனது உதவியாளர் மூலம் வீடியோ எடுத்துள்ளார். சிறிதுநேரம் கழித்து அந்த மந்திரவாதி, ‘இவரது உடலில் இருந்து பேய் வெளியேறிவிட்டது’ எனக்கூறிவிட்டு ஒரு தொகையை பெற்றுக்கொண்டு சென்றார். இந்நிலையில் மந்திரவாதி தாக்கியதில் ரஜிதாவின் பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதையடுத்து அவரது கணவர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ரஜிதாவின் சிறுமூளையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், ரத்த கசிவு அதிகரித்து சுயநினைவு இழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறினர்.

மேலும் ரஜிதாவுக்கு நடந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம், கரீம் நகர் போலீசாருக்கு தெரிவித்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மல்லேஷ் மற்றும் அவரது தாயிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகிவிட்ட மந்திரவாதியை தேடி வருகின்றனர்.

Tags : mother-in-law ,teenager ,sorcerer , Ghost, teenager, volleyball, kicked sorcerer
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை