×

சின்னசேலம் ரயில்வே தரைப்பாலத்தின் அடியில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதி

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடியில் இருந்து மேல்நாரியப்பனூர்வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரயில்பாதை செல்கிறது. இதில் பெரியசெருவத்தூர், ராயர்பாளையம், சின்னசேலம் அகதிகள் முகாம் அருகில், அம்மையகரம், தென்பொன்பரப்பி உள்ளிட்ட சில இடங்களில் ரயில் வரும்வரை தண்டவாளத்தை கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து தடை படுகிறது. சில நேரங்களில் ரயில் வருவதை கவனிக்காமல் விபத்தும் ஏற்படுகிறது. இதை உணர்ந்த நிர்வாகம் அந்த இடங்களில் தண்டவாளத்தின்கீழ் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் தரைபாலம் கட்டப்பட்டுள்ளது. அவ்வாறு பாலம் கட்டிய இடங்களில் மழைநீர் தேங்காத வகையில் தென்பொன்பரப்பி தரை பாலத்தின் இருபுறங்களிலும் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த பாலத்தின் அடியில் மழைநீர் செல்லவில்லை. அதனால் வாகன ஓட்டிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் ராயர்பாளையம், அம்மையகரம், அகதிகள் முகாம் உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்டுள்ள தரை பாலங்களில் இன்னும் பாலத்தின் இருபுறங்களிலும் மேற்கூரை அமைக்கும் பணி முடிவு பெறவில்லை. தரைப்பாலம் என்பதால் பள்ளமாக இருப்பதால் பாலத்தின் இருபுறங்களிலும் இருந்து மழைநீர் பாலத்தில் அடியில் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், மக்களும் கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வாகனங்கள் தண்ணீரில் மூழ்குவதால் வாகனங்களும் பழுதாகிறது.

இந்த தரைப்பாலம் கட்டியதன் நோக்கமே மக்கள், வாகன ஓட்டிகள், விவசாயிகள் தங்கு தடையின்றி செல்ல வேண்டும் என்பதற் காகத்தான். ஆனால் பாலம் கட்டும் பணி தொய்வடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் மேற்கூரை அமைக்கும் பணியை முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Chinnasalem ,Motorists ,railway bridge , Chinnasalem, railway ground bridge, rainwater
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...