×

அறந்தாங்கி அருகே நரசிங்க காவிரி ஆற்றில் பாலம் இல்லாததால் கிராமமக்கள் அவதி: 5 கி.மீ சுற்றி பள்ளி செல்லும் மாணவர்கள்

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே பெருங்காடு அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியில் நரசிங்க காவிரி ஆற்றில் பாலம் இல்லாததால், மழைக்காலங்களில் மாணவ, மாணவியர் சுமார் 5 கி.மீ தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே பாலம் கட்ட கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறந்தாங்கியை அடுத்த பெருங்காடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வந்தது. இந்த பள்ளி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களின் தீவிர முயற்சியால் அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளி தரம் உயர்த்தப்பட்ட பின்னரும், நடுநிலைப்பள்ளி இயங்கி அதே வளாகத்தில் இயங்கியது.

இதைத் தொடர்ந்து வேங்கூர் கிராமத்தில் கடந்த 2017ம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு புதிய கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு இப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு 455 மாணவ, மாணவியர் படித்து வந்தனர். பெருங்காடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வெட்டிவயல், மேல்மங்கலம், திட்டகுடி, விஸ்வநாதபுரம், பெருங்காடு, வீரராகவபுரம், கூத்தங்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சைக்கிளில் வரும் மாணவ, மாணவியர் பள்ளிக்கு செல்வதற்கு முன்பு ஓடும் நரசிங்க காவிரி காட்டாற்றை கடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மழைக்காலத்தில் நரசிங்க காவிரி காட்டாற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால், காட்டாற்றை கடந்து மாணவ,மாணவியர் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பெருங்காடு பகுதியில் இருந்து மாமண்டை சாலை வழியாகவே மாணவ, மாணவியர் பள்ளிக்கு சுமார் 5 முதல் 8 கி.மீ தூரம் வரை சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. கிராமப்புற மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு நரசிங்க காவிரி காட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவியர், பெற்றோர், ஆசிரிய, ஆசிரியைகள், சமூக ஆர்வலர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் பெருங்காடு சிவசுப்பிரமணியன் கூறியது: அறந்தாங்கி பகுதியில் சிறப்பாக இயங்கும் அரசு பள்ளிகளில் பெருங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியும் ஒன்று. தற்போது வேங்கூர் பகுதியில் கட்டப்பட்டுள்ளது. பள்ளிக்கு செல்லும் வழியில் ஓடும் நரசிங்க காவிரி காட்டாற்றில் தண்ணீர் வரும் சமயங்களில் மாணவ,மாணவியர் 50 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்வதற்கு, 5 முதல் 8 கி.மீ வரை சுற்றி வர வேண்டி உள்ளது. பெருங்காடு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்,அங்கு பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியைகளின் நலனை கவனத்தில் கொண்டு, நரசிங்ககாவேரியின் குறுக்கே தமிழக அரசு பாலம் கட்டித் தர வேண்டும் என நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இன்று வரை பாலம் கட்டிக்கொடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : river ,Narasingha Cauvery ,Aranthangi , Aranthangi, Narasingha Cauvery river, bridge, villagers suffer
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...