×

ஊரடங்கால் வறுமையில் சிக்கிய சுற்றுலா வழிகாட்டிகள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

கூடலூர்: கூடலூரை அடுத்துள்ள மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட மசினகுடி, மாயார், வாழைத்தோட்டம், மாவநல்லா,பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 250 ஜீப் ஓட்டுனர்கள்,150 சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்டவர்களின் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதமாக இவர்கள் வாழ்வாதாரம் இழந்து, எந்தவித வருமானமும் இன்றி தங்கள் வாழ்க்கையை நடத்த மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், கடந்த நான்கு மாதமாக  சுற்றுலா நடவடிக்கைகள் முழுமையாக முடங்கிப் போயுள்ளன.

வேறு தொழில்களுக்காக வெளியூர்களுக்கு செல்ல முடியாத நிலையில், உள்ளூரிலும் தொழில் வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. மாவட்டத்தில் பிற பகுதிகளில் ஜீப்புகளை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு தினசரி சுமாரான வருமானம் கிடைத்து வரும் நிலையில், மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஜீப் ஓட்டுனர்கள் பிழைப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.இதனால் ஜீப்புகள் ஆங்காங்கே வீடுகளை ஒட்டியும், சாலை ஓரங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஜீப் ஒட்டுனர்கள் கூறுகையில், எவ்வித வருமானமும் இல்லாத நிலையில், வீடுகளில் உள்ள நகைகளை அடமானம் வைத்தும், விற்றும் குடும்ப செலவுகளை சமாளித்து வந்துள்ளோம்.

கடந்த மாதம் வரை இருந்த கையிருப்புகள்  குறைந்து விட்ட நிலையில் மொபைல் போன்களை அடமானம் வைத்து பணம் திரட்டி வருகிறோம். இதே நிலை நீடித்தால் அடுத்தடுத்த மாதங்களில் எங்களுடைய வாழ்வாதாரம் எந்த நிலைக்குப் போகும் என்று தெரியாத நிலையில் உள்ளோம். ஓட்டுநர் சங்கத்தின் மூலம் முடிந்த அளவு உதவி செய்து வந்த நிலையில், தற்போது அந்த உதவியும் நின்று போய் உள்ளது. மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ள  தங்களது குடும்பங்களைப் பாதுகாக்க அரசு முன்வந்து போதிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : families , Curfew, Poverty, Travel Guides, Relief
× RELATED களைகட்டிய தேர்தல் திருவிழா.....