×

எட்டாக்கனியான ஆன்லைன் வகுப்புகள்: பழங்குடியின குழந்தைகளின் கல்வித்தரம் பாதிப்பு

குன்னூர்: ஆன்லைன் வகுப்புகள் இல்லாததால் பழங்குடியின குழந்தைகளின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளான கோழிக்கரை,குரும்பாடி, பர்லியாறு, புதுக்காடு போன்ற அடர்ந்த வனப்பகுதியில் பழங்குடியின மக்களான குரும்பர்,பனியர்,இருளர் போன்றோர் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் குறைந்த அளவில் பள்ளிகளுக்கு சென்று வந்தனர். ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக இவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. நகர் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு தினந்தோறும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கல்வித்தரம் பாதிக்க கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் வனப்பகுதிகளுக்குள் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களிடையே போதிய விழிப்புணர்வும், வருமானமும்  இல்லாததால்  அங்கு வாழும்  குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் என்பது எட்டாக்கனியாக உள்ளது‌. இதனால் இவர்களின் கல்வி தரம் பாதிப்படைந்துள்ளது.அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்கு நெட்வொர்க் இல்லாமல் உள்ளது‌. சாதாரண செல்போன் கூட இல்லாத நிலையில், ஆன்லைன் என்றால் என்னவென்று தெரியாது என அவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

காடுகளை மட்டுமே நம்பியுள்ள தங்களால் அதிக விலை கொடுத்து புதிய மொபைல் போன் வாங்க இயலாத நிலை உள்ளது என்றனர்.  தங்கள் குழந்தைகளின் கல்வியை பாதுகாக்க  மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து இடைநில்லா கல்வி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது பழங்குடியின மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Online Classes, Indigenous Child, Education Impact
× RELATED தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று...