×

மலைப்பகுதியில் மழை: ராமநதி அணை நீர்மட்டம் 3 அடி உயர்வு

கடையம்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் கடையம் ராமநதி அணை நீர்மட்டம் 3 நாட்களில் 3 அடி உயர்ந்தது. தென்காசி மாவட்டம், கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைக்கப்பட்ட 84 அடி முழு கொள்ளளவு கொண்ட ராமநதி அணை மூலம் கோவிந்தபேரி, பிள்ளைகுளம், தெற்கு கடையம், மந்தியூர், ரவணசமுத்திரம், முதலியார்பட்டி, பொட்டல்புதூர், வீராசமுத்திரம், பாப்பான்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள 5 ஆயிரம் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. அத்துடன் சுமார் 1 லட்சம் பேரின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும் இந்த அணையின் வாயிலாக இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது.

 இந்நிலையில் கடந்த ஜூன் 1ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து தமிழகத்திலும் பருவ மழை துவங்கியது. அந்தவகையில் கடையம் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதை நம்பி பாசன விவசாயிகள்  நெல் நாற்று பாவினர். ஆனால், சீசன் துவங்கி இரு மாதங்களாகியும் அணைக்கு அதிக அளவில் நீர்வரத்து இல்லாததால் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனிடையே கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கடையம் பகுதிகளில் பரவலாக பெய்த பலத்த மழையால் ராமநதி அணையின் நீர்மட்டம் 54.50 அடியில் இருந்து 57.50 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு வினாடிக்கு 16.40 கன அடி அளவுக்கு தண்ணீர் வரத்துள்ள நிலையில் வினாடிக்கு 3 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : hills ,Ramanathi , Rain, Ramanathi Dam, water level rise
× RELATED வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும்...