×

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.  முன்னதாக, தமிழகத்தில் கொரோனா சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அதனையடுத்து 112 தனியார் மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளாக அரசு அறிவித்தது. மேலும், அங்கு சிகிச்சை பெற விருப்பப்படுபவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது.

அதன்பின்னர் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்தது.  இந்த  கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனிடையே முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை இருந்தால் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. எனினும், தமிழகத்தில் பல மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் பேக்கேஜ் என்ற பெயரில்  லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து சில ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது.

இதையடுத்து  அந்த மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீரென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, , கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்த சென்னை கீழ்ப்பாக்கம் – Bewell தனியார் மருத்துவமனைக்கு, கொரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது, என்றும் பதிவிட்டுள்ளார்.Tags : hospitals ,Palanisamy , Corona, treatment, private hospitals, extra fees, CM Palanisamy
× RELATED தொற்று குறைந்தாலும் சிகிச்சை வசதிகளை...