×

முழு ஊரடங்கில் பரிதாபம்: கோவை மாவட்டத்தில் கார் மோதி தந்தை உயிரிழப்பு: மகள் படுகாயம்..!!

கோவை: தமிழகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இந்த உத்தரவு ஆகஸ்ட் மாதத்துக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், கோவையில் திருச்சி சாலையில் ஊரடங்கு விதி மீறி அதிவேகமாக வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

கோவை மாவட்டம் சவுரிபாளையத்தைச் சேர்ந்த 55 வயதான பரமசிவம் என்பவர், இவரது மகள் தீபிகா, உறவினர் ஒருவரின் திதி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் சிங்காநல்லூரில் இருந்து ராமநாதபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில், தனியார் பள்ளி சிக்னலில் இருந்து வலது புறத்தில் வாகனத்தை திருப்பும் பொழுது, ராமநாதபுரத்தில் இருந்து சிங்காநல்லூர் நோக்கி அதிவேகமாக வந்த கார் அவர்களின் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த பரமசிவம் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த தீபிகா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் சிங்காநல்லூரை சேர்ந்த நிரஞ்சன் எனத் தெரிந்தது. மேலும் , நிரஞ்சன் முன்னாள் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கோவையில், முழு ஊரடங்கால் வாகனங்கள் இன்றி வெறிச்சோடிக் கிடக்கும் சாலைகளில் சிலர், கார்களில் அதிவேகத்தில் உலா வருவதும் விபத்தை ஏற்படுத்துவதும் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : car crash ,district ,Coimbatore , Coimbatore, car, accident, fatality
× RELATED வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும்...